கரோனாவால் காலமான புதுப்பேட்டை தயாரிப்பாளர்! - சுவாமிநாதன் தயாரித்த படங்கள்
சென்னை: கரோனா தொற்று காரணமாக புதுப்பேட்டை படத்தின் தயாரிப்பாளர் சுவாமிநாதன் காலமானார்.

லட்சுமி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் கே. முரளிதரன், ஜி.வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து 'அரண்மனை காவலன்', 'வேலுச்சாமி', 'மிஸ்டர் மெட்ராஸ்', 'கோகுலத்தில் சீதை', 'உள்ளம் கொள்ளை போகுதே', 'அன்பே சிவம்', 'தாஸ்', 'ஒருவன்', 'சிலம்பாட்டம்', 'புதுப்பேட்டை' உட்பட ஏராளமான படங்களை தயாரித்தவர் சுவாமிநாதன்.
இவர் சென்னை கோடம்பாக்கத்தில் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்தார். இந்நிலையில், இவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், கடந்த வாரம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 10) சுவாமிநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 67. இவருக்கு லலிதா என்கிற மனைவியும் அசோக், அஸ்வின் என இரு மகன்கள் உள்ளனர்.