'ஊரே அடங்கி நிற்கும் எங்க "கருப்பன்" நடந்து போனா' - சூரி பெருமிதம்! - புரோட்டா சூரி
சென்னை: 'ஊரடங்குக்கு நடுவில, ஊரே அடங்கி நிற்கும் எங்க "கருப்பன்" நடந்து போனா' என நடிகர் சூரி, தான் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளை குறித்து சமூக வலைதளத்தில் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று அச்சம் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு காலத்தில் சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சூரி. அப்போது தனது குழந்தைகளுடன் சேர்ந்து கரோனா விழிப்புணர்வு காணொலிகளை வெளியிட்டு, பலரது பாராட்டையும் பெற்றார்.
சென்னையிலிருந்த நடிகர் சூரி, பின்பு தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமத்திற்குச் சென்று, அங்கு தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகின்றார்.
தற்போது ராஜாக்கூரில் தான் வளர்க்கும் 'கருப்பன்' என்ற காளையுடன் இருக்கும் புகைப்படங்களை 'ஊரடங்குக்கு நடுவில, ஊரே அடங்கி நிற்கும் - எங்க "கருப்பன்" நடந்து போனா' என்ற வாசகத்துடன் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து நடிகர் சூரி கூறுகையில், ’கருப்பன் காளை இதுவரை 40க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டுள்ளது. ஜல்லிக்கட்டுப்போட்டியின் போது வீரர்கள் இது வரையில் கருப்பன் காளையை எவரும் பிடித்ததில்லை. ஏன் தொட்டதுகூட இல்லை. பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் பல பரிசுகளை வென்றுள்ளது எங்கள் கருப்பன்.
வென்ற பரிசுகளை எங்கள் கருப்பன் காளையைப் பராமரிப்பவர்களுக்கும், ஊர் மக்கள் வீட்டில் ஏதேனும் காதுகுத்து அல்லது திருமண விழா போன்ற விசேஷங்கள் நடக்கையில் அன்பளிப்பாகவும் கருப்பன் காளை சார்பாக அளித்து விடுவோம். தற்போது எங்கள் கருப்பன் காளையை எனது தம்பி வினோத் பராமரித்து வருகிறார்' என்று கூறினார்.