இந்தியில் 'பிங்க்' தலைப்பில் வெளியான திரைப்படம் தமிழில் 'நேர்கொண்ட பார்வை' என்ற தலைப்பில் அஜித் நடித்துள்ளார். ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வினோத் இயக்கிய இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
எதிர்த்து நில்...துணிந்து செல்! கால் சென்டர், அழகு நிலையம், நட்சத்திர ஹோட்டலில் நடனம் என மூன்று வெவ்வேறு இடங்களில் பணிபுரிந்து வருபவர்கள் மூன்று பெண்கள். அவர்களை வைத்தே படம் முழுக்க நகர்கிறது. ஒரு பெரும் பணக்கார இளைஞருடன் மூன்று பெண்களும் விருந்துக்கு செல்கின்றனர். அங்கு ஒரு பெண்ணிடம் தவறாக நடக்கவே, அந்த இளைஞனிடம் இருந்து தற்காத்துக் கொள்ள அவனை பாட்டிலால் தாக்கி தப்பித்து விடுகிறார்.
அதன் பின்பு, காயம் அடைந்த இளைஞன் போலீசில் புகார் கொடுக்கிறான். அப்பெண்ணையும், அவளுடன் இருக்கும் மற்ற இரண்டு பெண்களையும் பலிவாங்க துடிக்கிறான். போலீசார் மூன்று பெண்களில் இளைஞனை தாக்கிய பெண்ணை கைது செய்கின்றனர். இறுதியில் அப்பெண்கள் அந்த வழக்கில் இருந்து வெளியில் வருகிறார்களா, அவர்கள் அந்த இளைஞனால் பலி வாங்கப்படுகிறார்களா, அஜித்தின் பங்கு இதில் என்ன என்பதே மீதிக்கதை...
சட்டம் தன் கடமையை செய்யும்..! மூன்று பெண்கள் தங்கியிருக்கும் அதே அப்பார்ட்மென்டில் தான் அஜித் தங்கியுள்ளார். மனரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் அஜித், அதில் இருந்து வெளிவந்து மூன்று பெண்களை காப்பாற்ற இந்த வழக்கை கையில் எடுக்கிறார். அஜித்திற்கு பெரிய மாஸ் சீன்கள் எல்லாம் இதில் இல்லை, ஆனால் அவருக்கு கொடுத்திருக்கும் வேலையை சரியாக நேர்த்தியாக செய்து முடித்திருக்கிறார். மூன்று பெண்களையும் அந்த வழக்கில் இருந்து காப்பாற்றினாரா என்பதே படத்தின் முடிவு. இதன் மூலம் இப்படம் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறது என்பதை வினோத் அழகாக காட்சிப்படுத்தியிருப்பார்.
மாஸ் ஹீரோ என்பதற்காக தேவையற்ற கமர்ஷியல் எதையும் சேர்க்காமல் கதைக்கு தேவையானதை மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார் வினோத். ஃபிளாஷ் பேக்கில் வரும் வித்யா பாலன் சிறிது நேரம் திரையில் வந்தாலும் அவருடை இடத்தை கட்சிதமாக நிரப்பியிருக்கிறார் இயக்குநர். அஜித்-வித்யா பாலன் ஜோடியை திரையில் அழகாக காட்டியிருக்கிறது நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு. படத்தில் எந்த இடத்திலும் ஒளிப்பதிவு இடையூராக தெரியக்கூடாது என்பதற்காகவே பெரும்பாலான காட்சிகள் க்ளோசப்பில் வைக்கப்பட்டுள்ளது. எப்போதும் போல யுவனின் இசை மனதை வருடுகிறது. அதிலும் முக்கியமாக அஜித்-வித்யா பாலனின் ரொமான்டிக் பாடல் அனைவரின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நெஞ்சில் துணிவிருந்தால்...! முதன் முறையாக வழக்கறிஞர் கதாபாத்திரம் எடுத்திருக்கும் அஜித், நீதிமன்றத்தில் பெண்களுக்காக கர்ஜிக்கும் அவரது குரல் கைத்தட்டல்களை அள்ளுகிறது. "யோசிச்சு நடக்கனும், அதுக்குனு யோசிச்சுட்டே நடக்கக் கூடாது" என்னும் வசனம், அதையடுத்து "நோ..என்றால் நோ தான்" பெண்ணுடைய அனுமதி இல்லாமல் அவள் உன் மனைவியாக இருந்தாலும் அவளை நெருங்காதே என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறது "நேர்கொண்ட பார்வை". மொத்தத்தில் சமூகத்திற்கு தேவையான ஒரு மனுவை நேர்கொண்ட பார்வையின் மூலம் கொடுத்து அவ்வழக்கினை வெற்றிப்பெற வைப்பது மக்கள் கையிலே உள்ளது.