பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள 2.0 முப்பரிமாண (3டி) தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள இத்திரைப்படம் மொத்தமாக முதல் நாளில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக தரத்தில் ஒரு கோலிவுட் திரைப்படம் 2.0! - hollywood
உலகம் முழுவதும் வெளியான 2.0 திரைப்படத்தின் கதை இதுதான்!
மேலும் தமிழகத்தில் சென்னை, மதுரை, நெல்லை உட்பட பல மாவட்டங்களில் இன்று அதிகாலையில் இருந்தே ரஜினி ரசிகர்கள் படத்தை காண ஆர்வத்துடன் திரையரங்குகளில் கூடி வருகின்றனர். இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் கதைக்கரு, மொபைல் போன்களின் கதிர்வீச்சால் பாதிக்கப்படும் பறவைகள் மனித குலத்தை எவ்வாறு பழிவாங்குகின்றன? என்பதை அடிப்படையாக கொண்டுள்ளது.
இப்படத்தின் கதையை ஒரு பகுதி சயின்டிபிக் திரில்லராகவும், ஒரு பகுதி ஹாரர் ஆகவும், ஒரு பகுதி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. பறவைகளை ஆராய்ச்சி செய்யும் முதியவர் ஒருவர் செல்போன் டவரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வது போல் படம் ஆரம்பமாகிறது. அதன் பிறகு விஞ்ஞானி வசீகரன் அறிமுகமாகிறார்.
பின்னர் அழகு பதுமையாக நிலா என்கிற கதாபாத்திரத்தில் எமி ஜாக்சன், வசீகரனின் உதவியாளராக வருகிறார். அவர் ஒரு மனித வடிவிலான ரோபோ என்பதை வசீகரன் ஆர்ப்பாட்டமின்றி விளக்குகிறார். இதன் பின்னர் ஒவ்வொருவர் கையில் இருக்கும் மொபைல் போன்களும் வானில் பறக்கத் தொடங்குகின்றன. இந்த விபரீத நிகழ்வை குறித்து விசாரிக்க வசீகரன் அழைக்கப்படுகிறார்.
இந்த பிரச்னையை தீர்க்க 'அவனால் மட்டும் தான் முடியும்' என்பது போல், ஏற்கனவே பிரித்து அழிக்கப்பட்ட சிட்டி ரோபோவை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று வசீகரன் கூறுகிறார். இதன் பின்னர் தான் கதைக்களம் சூடுபிடிக்க ஆரம்பமாகிறது. முதல் பாதி ஒரு பேய் படம் போலும், பொது மக்களுக்கு குழப்பமான படம் போல விளங்கினாலும், சிட்டி ரோபோ அறிமுகமான பிறகு படத்தின் வேகம் கூடுகிறது. இரண்டாம் பாதியில் அக்சய் குமாரின் அவதாரம் ரசிகர்களை வியக்க வைக்கிறது.
மொபைல் போன்கள் வானில் ஏன் மாயமாகிறது? தற்கொலை செய்யும் முதியவருக்கும், பறவைகளுக்கும் என்ன சம்பந்தம்? அக்சய் குமார் ஏன் மக்களை பழிவாங்க நினைக்கிறார்? சிட்டி ரோபோ இந்த பிரச்னையை எவ்வாறு தீர்க்கிறது? என்பதற்கான கேள்விகளுக்கு இயக்குநர் ஷங்கர் இரண்டாம் பாதியில் விளக்கமளித்துள்ளார். வானில் பறக்கும் செல்போன்கள் காட்சி, வனப்பகுதி முழுவதும் செல்போன்களால் ஒளிரும் காட்சி, ராட்சத பறவை திரையில் வரும் காட்சி, சிட்டிக்கும், ராட்சத பறவைக்கும் இடையிலான சண்டை காட்சிகள் உள்ளிட்டவை பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
படத்தின் காட்சிகளில் ஏலியன்ஸ், டெர்மினேட்டர் 2, கோஸ்ட்பஸ்டர்ஸ் உள்ளிட்ட சில ஆங்கில படங்களின் சாயல் இருகிறது. இருப்பினும் அதை ஒரு பெரிய குறையாக எடுத்துக் கொள்ள முடியாது. மொத்தத்தில் இந்த 2.0 திரைப்படம் இந்திய சினிமா பார்வையாளர்களுக்கு உலகத்தரத்தில் ஒரு கோலிவுட் படம் பார்த்த திருப்தியை கொடுக்கிறது.