இளம் திறமையாளர்களை கண்டறிந்து அவர்களின் பாடல்களை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.
மெலடி, ராக் பாடல், குத்துப் பாடல், கிராமிய பாடல் என பல்வேறு வெரைட்டி பாடல்களை இளமை ததும்பும் விதமாக கொடுத்து, தனக்கென தனிப்பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. நூறு படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இவர், தற்போது 'தல60' உள்ளிட்ட பல முக்கிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
கடந்த 2015இல் யூ1 ரெக்கார்ட்ஸ் என்று நிறுவனத்தை தொடங்கிய யுவன் ஷங்கர் ராஜா, அதன் மூலம் பாடல்கள், ஆல்பங்கள் ஆகியவற்றை வெளியிட்டு வந்தார். இதையடுத்து தற்போது அடுத்தகட்டமாக இளம் இசையமைப்பாளர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பை அளிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
அதன்படி, தனது யூ1 ரெக்கார்ட்ஸ் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், இளம் இசையமைப்பாளர்கள் தனித்துவமாக இருக்க வேண்டும். அவர்களின் தனித்துவத்தை வெளிக்காட்டும் நோக்கத்தில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. எனவே இளம் இசையமைப்பாளர்கள் சினிமா பாடல்கள் என்று இல்லாமல் தங்களது ஆல்பம், தனித்துவமான பாடல்கள், இசைக்கோர்ப்பு ஆகியவற்றை artistdemos@u1records.com என்ற தளத்துக்கு அனுப்பமாறு கோரியுள்ளார்.
மேலும், அந்த இசையை பரிசீலித்து அந்த இசையமைப்பாளரின் திறமையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல எங்கள் குழுவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த யுவன் ஷங்கர் ராஜா, 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார். இதையடுத்து இந்த ஆண்டு இவரது தயாரிப்பில் ஆலிஸ், மாமனிதன் ஆகிய படங்கள் உருவாகி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து தற்போது இளம் இசையமைப்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் புதிய முயற்சியிலும் இறங்கியுள்ளார்.