1997ஆம் ஆண்டு பார்த்திபன், சரத்குமார் நடிப்பில் வெளியான அரவிந்தன் படத்திற்கு இசையமைத்தன் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு யுவன் ஷங்கர் ராஜா அறிமுகமானார். அரவிந்தன் பிப்ரவரி 27ஆம் தேதி வெளியானது. இதனையடுத்து #23YearsofYuvanism என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் சமூகவலைதளத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து 23 வருடங்களாக இசையமைத்து வருவது சாதாரண விஷயம் கிடையாது. இசைஞானி இளையராஜாவின் மகனாக இருந்ததால், இசை இவருக்கு கைவந்த கலையாக இருந்துள்ளது. இருப்பினும் தனது சொந்த முயற்சியால் இசையைக் கற்றுக்கொண்டு தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைத்து இன்று வரை முன்னணி இசையமைப்பாளராக வலம்வருகிறார்.
மெலடி, ராக் பாடல், குத்து பாடல், கிராமிய பாடல் எனப் பலவிதமான வெரைட்டி பாடல்களை இளமை ததும்பும் விதமாக கொடுத்து, தனக்கென தனிப்பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. நூறு படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இவர், தற்போது 'தல 60' உள்ளிட்ட பல முக்கிய படங்களுக்கு இசையமைத்துவருகிறார்.