யோகி பாபு நடிப்பில் அறிமுக இயக்குநர் ஆர்.ஏ. விஜய முருகன் இயக்கும் புதிய படம் 'காக்டெய்ல்'. பிஜி மீடியா ஒர்க்ஸ் சார்பில் ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா தயாரிக்கும் இந்தப் படத்தில் யோகிபாபு, நாய்க்கு முடிவெட்டும் கடை நடத்தும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகை ஒருவர் நடிக்கிறார்.
இந்த வித்தியாசமான படத்தில் யோகிபாபு உடன் சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மைம் கோபி ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களுடன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 'காக்டெயில்' என்கிற பறவையும் படம் முழுக்க முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறது.
இந்திய சினிமாவில் முதன் முறையாக ஒரு பறவை இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் யோகி பாபுவும் அவரது நண்பர்களும் செய்யாத கொலை வழக்கு ஒன்றில் எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொள்கிறார்கள்.
கொலைசெய்யப்பட்ட நபர் யார்? அந்தக் கொலையை செய்தது யார்? இதிலிருந்து மீண்டு யோகிபாபு எப்படி வெளியே வருகிறார். இதில் பறவையின் பங்கு என்ன என்பதுதான் படத்தின் கதை.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில், படத்தின் பறவையின் லுக் படத்தை ஏற்கனவே வெளியிட்டு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.