தயாரிப்பு - 4 monkeys ஸ்டுடியோ
இயக்கம் - சாம் ஆண்டன்
ஒளிப்பதிவு - கிருஷ்ணன் வசந்த்
தொகுப்பு - ரூபன்
இசை - ராஜ் ஆர்யன்
சண்டைப் பயிற்சி - பிசி.
வசனம் - சாம் ஆண்டர்சன், ரூபன், அந்தோணி, பாக்கியராஜ், ஆர்.சவரிமுத்து
நடிகர்கள்- யோகி பாபு, ராஜ் பரத், எலிசா, சார்லி, ஆனந்தராஜ், ஆடுகளம் நரேன், ரவி மரியா, மனோபாலா, மயில்சாமி, லிவிங்ஸ்டன், தேவதர்ஷினி.
கூர்கா குடும்பத்தில் பிறந்து தங்கள் குலத் தொழிலான 'கூர்க்கா' வேலை செய்யாமல் எப்படியாவது போலீஸ் வேலை வாங்கியே தீர்வேன் எனத் தீர்மானமாக இருக்கும் கூர்க்கா பகதூர் பாபு (யோகி பாபு). அதீத நம்பிக்கையில் போலீஸ் கனவை நினைவாக்க முயன்றாலும் அவரின் மனதில் இருக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் உடலில் இல்லாமல் போகவே போலீஸ் வேலைக்கு தேர்வாகாமல் நிராகரிக்கப்படுகிறார். அதே தேர்வில் அண்டர் டேக்கர் என்ற நாயும் தேர்வில் தேறாமல் போக அந்த நாயுடன் பாபுவும் வெளியேற்றப்படுகிறார்.
இந்நிலையில் யோகி பாபுவும், அந்த நாயும் ஒரு செக்கியூரிட்டி கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார்கள். மிகப்பெரிய ஷாப்பிங் மாலில் வேலை கிடைக்கிறது. இதற்கிடையில் ஒரு கும்பல் அந்த மாலை ஹைஜாக் செய்து மக்களைப் பணயக் கைதியாக பிடித்து வைத்து பணம் கேட்டு மிரட்டுகிறது. இந்த மர்ம கும்பலிடம் மக்கள் எப்படி காப்பாற்றப்படுகிறார்கள் என்பதே மீதி கதை.
யோகி பாபு எப்போதும் போல் வழக்கமான தன்னுடைய காமெடி ட்ரெண்ட் மாறாமல் கவுண்டர் காமெடி, பாடிலாங்குவேஜூடன் கலகலப்பு ஊட்டுகிறார். தன்னையும் கிண்டலடித்து பிறரையும் கிண்டலடிக்கும் பாணி கதையை எங்கேயும் தொங்காமல் எடுத்துச் செல்கிறது. சில இடங்களில் நாடகத்தனமான வசனங்களை தவிர்த்திருக்கலாம். 'அண்டர் டேக்கர் உன் டிஃபன் நின்னுட்டு வருது பாரு' என மனோபாலாவைக் கலாய்ப்பது துவங்கி,' இந்த மூஞ்சி கூர்க்கான்னா நம்புவாங்களா' என்றதும் இதை மூஞ்சின்னு சொன்னாலே நம்ப மாட்டாங்க' பாணி காமெடிகள் ரோப்பிள் ரகம்.