பிரபல பஞ்சாப் பாடகர் யோ யோ ஹனி சிங், வீடியோ ஆல்பம் பாடல்களை வெளியிட்டு இளைஞர்களிடையே பிரபலமானவர். இவரது பாடல்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. பாலிவுட் படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார். ஒரு சில படங்களில் நடித்தும் உள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிர ரசிகரும் ஆவார்.
பிரபல பாடகர் யோ யோ ஹனி சிங் விரைவில் கைது? - கைது
'மக்னா' பாடல் ஆல்பத்தில் பெண்களுக்கு எதிராக ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறி, பிரபல பாடகர் யோ யோ ஹனி சிங் மீது பஞ்சாப் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவர் டிசம்பர் 22ஆம் தேதி 'மக்னா' என்னும் வீடியோ ஆல்பத்தை வெளியிட்டார். இந்த ஆல்பத்தை ட் சீரிஸ் இசை நிறுவனம் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இப்பாடலில் பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக தரக்குறைவான வார்த்தைகளை இவர் பயன்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தப் பாடல் பெண்களுக்கெதிராக வக்கிர எண்ணத்துடன் பாடியுள்ளார் என்றும் பஞ்சாப் மாநில மகளிர் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும், இதுகுறித்து சாஸ் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த லக்விந்தர் குமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இந்திய தண்டனை சட்டப் பிரிவு 294, 509 ஆகிய பிரிவுகளின் கீழ் ஹனி சிங் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், யோ யோ ஹனி சிங் விரைவில் கைது செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.