’ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் ஜாங்கிரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர் நகைச்சுவை நடிகை மதுமிதா. அதன்பிறகு, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ராஜா ராணி, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் கலக்கினார். மேலும், விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு? சீசன் 5இல் நடுவராகவும் இருந்தார்.
இந்நிலையில், மதுமிதா கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்பட்ட பிக்பாஸ்-3இல் போட்டியாளராக பங்கேற்றார். இவர் உள்ளே சென்றதிலிருந்து மற்ற போட்டியாளர்களிடம் சிறு சிறு மனக்கசப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சியின் 56ஆவது நாளில் மதுமிதா போட்டியிலிருந்து திடீரென்று வெளியேற்றப்பட்டார்.
இதற்கு மதுமிதா சக போட்டியாளர்களிடம் தன் கருத்தை நிரூபிப்பதற்காகவே தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டார். இது விதிமீறல் என்பதால் அவரை உடனடியாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றியதாக நிர்வாகம் தெரிவித்திருந்தது.
தொகுத்து வழங்கும் கமலும் இதனை தெளிவுபடுத்தியிருந்தார். இதையடுத்து, மதுமிதா சம்பள பாக்கியை தராவிட்டால் தற்கொலை செய்வேன் என்று மிரட்டியாதாகக் கூறி விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்தது.
இந்நிலையில், இன்று மதுமிதா அஞ்சல் மூலம் புகார் மனு ஒன்றை நசரத்பேட்டை காவல் நிலையத்தில் அளித்துள்ளார். அதனை அவரது வழக்கறிஞர் இளங்கோவன் காவல் நிலையத்தில் வழங்கியுள்ளார். அந்தப் புகாரில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் போட்டியாளராக இருந்ததாகவும், 56ஆவது நாளில் தனது கருத்தை தெரிவித்ததற்கு அப்போட்டியில் உள்ள சக போட்டியாளர்கள் தன்னை கொடுமை செய்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், இதன் காரணமாக தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி அப்போட்டியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பிவிட்டதாகவும், இதை விஜய் தொலைக்காட்சியும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனும் கண்டிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
அதேபோல், தன்னைப்பற்றி தவறான விமர்சனங்களை யாரும் செய்யக் கூடாது எனவும், விஜய் தொலைக்காட்சி மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்.
மதுமிதாவின் வழக்கறிஞர் இளங்கோவன் இது குறித்து மதுமிதாவின் வழக்கறிஞர் கூறுகையில், மதுமிதாவை நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றினாலும் அவரை விஜய் தொலைக்காட்சி தன் கட்டுப்பாட்டில்தான் வைத்துள்ளது எனவும், அவரை அந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க விஜய் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.