புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் ஆதரவற்ற பிணங்களை தனது காரில் எடுத்துச் சென்று அடக்கம் செய்யும் பணியை செய்தவர். அதேபோல் பணம் இல்லாமல் பிணங்களை எடுத்துச் செல்ல முடியாமல் தவிக்கும் பொதுமக்களுக்கு தனது காரிலேயே மருத்துவமனையில் இருந்து ஏற்றிச் சென்று கொடுத்து உதவி செய்துவருகிறார். இதுபோல் இவர் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பிணங்களை கொண்டு சென்றுள்ளார் .
ராகவா லாரன்ஸ் வீடு கட்டிக்கொடுத்து கவுரவித்த கணேசன் யார்? - சமூக ஆர்வலர் கணேசன்
கஜா புயலால் வீட்டை இழந்த சமூக செயற்பாட்டாளர் கணேசன் என்பவருக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ. 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டிக்கொடுத்து கவுரவித்தார். லாரன்ஸ் தனது சொந்த செலவில் வீடு கட்டிக்கொடுக்கும் அளவு கணேசன் என்ன செய்தார் என்பதைப் பார்ப்போம்.

ஒக்கி புயல், கஜா புயல் என எங்கு இயற்கை சீற்றம் வந்தாலும் அங்கு சென்று முதலில் உதவும் நபர் இவராகத்தான் இருப்பார். இதற்கென எந்த ஒரு தொகையையும் அவர் கேட்க மாட்டார். அதனால் இவரது சேவையைப் பாராட்டி கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டத்தை தாக்கிய கஜா புயலில் கணேசனின் வீடு முற்றிலும் சேதமடைந்தது. இது குறித்து தகவலறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சொந்த செலவில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வீடு கட்ட கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டினார். வீடு கட்டிமுடிக்கப்பட்டு நிறைவுவிழாவில் லாரன்ஸ்கலந்துகொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.