உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை உலகம் முழுவதும் லட்சக்கணக்கோர் உயிரிழந்துள்ளனர். இந்த தொற்றை கட்டுப்படுத்த பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி வருகின்றன. மேலும் இந்த வைரஸூக்கு பல நாடுகள் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் வேலைகளில் முழுவீச்சாக இறங்கியுள்ளன.
இதனையடுத்து 'கரோனா வரைஸ்' குறித்து திரைப்படம் ஒன்றை இயக்குநர் ராம்கோபால் வர்மா தயாரித்துள்ளார். கரோனா வைரஸ் என தலைப்பிடப்பட்டிருக்கும் அந்தப் படத்தை ராம்கோபால் வர்மா - அகஸ்திய மஞ்சு ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.
கரோனா வைரஸ் திரைப்படத்தின் ட்ரெய்லரை ராம்கோபால் வர்மா தனது சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நான்கு நிமிடங்கள் ஓடும் இந்த ட்ரெய்லரில், ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருக்கும் நபருக்கு கரோனா வந்துவிடுகிறது. வீட்டில் இருக்கும் நபர்கள் அவரை எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பது த்ரில்லர் பாணியில் காட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது கரோனா வைரஸ் குறித்து உலகில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் இதுவாகும்.