கரோனா அச்சம் காரணமாக ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இருந்த தேசிய ஊரடங்கு தற்போது மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது பொருளாதாரம் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்துள்ளது.
இதனிடையே மக்கள் தேசிய ஊரடங்கு காலத்தில் என்ன செய்யவேண்டும் என்ன செய்யக்கூடாது என்பது குறித்து திரைப்பிரபலங்களும் அரசும் கூறி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து நடிகர் விவேக் கரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நாம் 25 நாள்களாக லாக்டவுனில் இருக்கிறோம். முழு இந்தியாவும் இன்னும் கொஞ்ச நாள்களும் இருக்கபோகிறோம்.
இனிமேல் இருக்கப் போவதுதான் முக்கியம். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ரொம்ப குறைவு. அதற்கு காரணம் ஊரடங்கை நாம் கடைப்பிடித்ததுதான்.
அரசு சொன்னபடி நாம் ஓரளவுக்கு நடந்திருக்கிறோம் என்பது தான் இந்தக் கம்மியான தொற்றுக்கு காரணம். இதில் இருந்து வெளியே வருவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் அடுத்து வரும் நாள்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும்.
வாய், மூக்கு, மறைப்பது போன்ற முகக் கவசம் அணிய வேண்டும். கண் குறித்து கண் மருத்துவரிடம் கேட்ட போது, அதன் மூலம் பெரிய ஆபத்து இல்லை என்று சொன்னார்கள். வாய், மூக்கு, இரண்டுமே கண்டிப்பாக முகக் கவசத்தால் மூடியிருக்க வேண்டும். நாம் அனைவருமே வீட்டை விட்டு வெளியே சென்றால் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். சாப்பாட்டுக்கு மிளகு ரசம், முகத்துக்கு முகக் கவசம். இரண்டும் இருந்தால் வாழ்க்கை ஆசம். முகக் கவசத்தை கண்டிப்பாக அணியுங்கள்." என்று அந்த வீடியோவில் விவேக் கூறியுள்ளார்.