ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகியோரின் படங்களில் இயக்குநர் குழுவில் பணி புரிந்தவர், கார்த்திக் அத்வைத். இவர் விக்ரம் பிரபுவை வைத்து 'பாயும் ஒளி நீ எனக்கு' என்னும் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
மேலும் கார்த்திக் அத்வைத், அமெரிக்காவில் திரைப்படம் தொடர்பான படிப்பை படித்து முடித்துள்ளார்.
அதிரடி - ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள 'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தில் விக்ரம் பிரபுவுடன் வாணி போஜன், நடிகர்கள் தனன்ஜெயா, விவேக் பிரசன்னா, குணை உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மகா மகாலட்சுமி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக குமாரசாமி தயாரித்த இப்படத்திற்கு, 'பரியேறும் பெருமாள்' ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் விக்ரம் பிரபு, வாணி போஜன், உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். முன்னதாக மறைந்த நடிகர்கள் புனித் ராஜ்குமார், விவேக் ஆகியோருக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
வாணிபோஜனைப் பற்றி பேசி வழிந்த விக்ரம்பிரபு
விக்ரம் பிரபு பேசுகையில், 'கரோனா காலகட்டத்தில் ஒரு விஷயத்தை எடுத்துமுடிப்பது என்பது எவ்வளவு கஷ்டம் என எல்லோருக்கும் தெரியும். அதுவும் உச்சகட்டத்தில்தான் இந்தப் படம் அமைந்தது. இதில் நிறைய விஷயங்கள் நடந்தன. நல்ல விஷயம் என்னவென்றால், இயக்குநர் கார்த்திக் நன்றாக தமிழ் பேச கற்றுக்கொண்டார்.
ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பதை ஒரு டைரக்டராக இல்லாமல், ஒரு ரசிகராக இருந்து பார்த்து, காட்சிகளை அமைத்திருக்கிறார். அவருடன் பக்க பலமாக இருந்த இயக்குநர் குழுவுக்குப் பாராட்டுகள்.
மற்ற நடிகர்களுடன் நடிப்பது ரொம்பவே நல்ல விஷயம். இதில் வாணிபோஜன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அவரிடம் எப்போதும் ஒரு பாசிடிவ் எனர்ஜி இருக்கும். நிறைய பாசிடிவ் எண்ணம் கொண்டவர்கள் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்கள். எந்நேரமும் வாணி சிரித்த முகத்துடன் இருப்பார். அவருடைய அமைதியான முகத்தைப் பார்க்க நன்றாக இருக்கும்.
பொதுவாக ஆக்ஷன் படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இந்தப் படத்தில் ஆக்ஷன் மிக வித்தியாசமாக இருக்கும். அனைவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றுங்கள்' என்றார்.
சஸ்பென்ஸ் வைத்த இயக்குநர்
இயக்குநர் கார்த்திக் அத்வைத் பேசுகையில், " இது, அதிரடியான சண்டைக் காட்சிகள் நிறைந்த படம். கதாநாயகன் விக்ரம் பிரபு இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடைய கதாபாத்திரம், 'சஸ்பென்ஸ்' ஆக வைக்கப்பட்டு இருக்கிறது.
படம் நன்றாக வந்திருக்கிறது. தயாரிப்பாளருக்கு நன்றி. விக்ரம் பிரபு சார் கடின உழைப்பை தந்திருக்கிறார். வாணி போஜன், மற்ற நட்சத்திரங்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்களது சிறப்பான உழைப்பை கொடுத்துள்ளனர். இப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். உங்கள் ஆதரவை இப்படத்திற்குத் தர வேண்டும்" என்றார்.
விக்ரம்பிரபு, வாணிபோஜன் செம ஜோடி
ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் பேசுகையில், " 'பரியேறும் பெருமாள்' படத்தில் பணியாற்றினேன். அந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்புதான் அடுத்தடுத்து எந்த மாதிரியான படங்களில் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை கொடுத்தது. எனவே வழக்கமான படங்களை செய்ய எண்ணுவதில்லை.
'பாயும் ஒளி நீ எனக்கு' படக் கதையை கேட்டேன். விஜய் சார், அஜித் சார் படம் போல் பெரிய படமாக இருந்தது. இது ஆக்ஷன் படம். எல்லா ஒளிப்பதிவாளருக்கும் ஒரு ஆக்ஷன் படம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
'பாயும் ஒளி நீ எனக்கு' படக்குழு எனக்கு நான்காவது படத்திலேயே இப்படி அமைந்தது. நம்பவே முடியவில்லை. நன்றாகத் தயாராக வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இயக்குநருடன் நல்ல நட்பு இருந்தது.
இருவரும் படம் எப்படியெல்லாம் சிறப்பாக அமைய வேண்டும் என்று பேசினோம். வழக்கமான ஆக்ஷன் மசாலா படம் போல் இல்லாமல், உலக அளவிலான படமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். எங்கள் இருவரின் எண்ணம் ஒன்றுபோல் இருந்தது.
'பாயும் ஒளி நீ எனக்கு' படம் எடுப்பதற்கே மிகவும் கடினமான உழைப்பு தேவைபட்டது. மதியம் படப்பிடிப்புத் தொடங்கினால் அடுத்த நாள் காலை வரை படப்பிடிப்பு நடக்கும்.
விக்ரம் பிரபுவின் ஆக்ஷன் காட்சிகள் வித்தியாசமாக இருக்கும். நடிப்பும் மிக நன்றாக இருக்கும். எல்லா கட்சிகளையும் ஒரே ஷாட்டில் முடித்துவிடுவார். அதனால் படக் குழுவினர் முதலிலேயே ஒத்திகையெல்லாம் முடித்து, தயாரான பிறகுதான், அவரை செட்டுக்கு அழைப்போம். அந்தளவுக்கு அவர் தொழில் நேர்த்தி கொண்டவர்.
வாணி போஜனும் மிகவும் ஈடுபாடுடன் படப்பிடிப்பில் பங்கேற்றார். அவருக்கு எனது குடும்பத்தினர் அனைவரும் ரசிகர்கள். அதனால் வீட்டிலிருந்து புறப்படும் போதே வாணி போஜனை அழகாக காட்ட வேண்டும் என்று சொல்லி அனுப்புவார்கள். அவரை மிகவும் அழகாக காட்டியிருக்கிறோம். விக்ரம் பிரபு, வாணி ஜோடி மிகவும் பொருத்தமாக அழகாக அமைந்திருக்கிறது' என்றார்.
காதல் காட்சிகளை வாணியிடம் கேட்டு நடித்த விக்ரம் பிரபு
நடிகை வாணி போஜன் பேசுகையில், " தயாரிப்பாளருக்குப் பெரிய நன்றி. இயக்குநர் கார்த்திக் என்னிடம் கதை சொல்லவந்தபோது பாதி தெலுங்கு, பாதி தமிழில் கஷ்டப்பட்டுச் சொன்னார்.
அது புரிந்தது. அதே சமயம் அங்கிருந்து இங்குவந்து படம் செய்ய வேண்டும் என்று கடினமாக உழைத்திருக்கிறார். அவருக்குப் பெரிய நன்றி.
எந்த ஒரு படத்துக்கும் நான் காஸ்டியூம் மேக்கப் எல்லாம் அதிகம் பார்த்தது கிடையாது. ஆனால், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் காஸ்டியூமிலிருந்து மேக்கப்பிலிருந்து எல்லாவற்றையும் நுணுக்கமாக பார்த்தார். அதனால் நானும் ஆர்வம் காட்டினேன். அவருக்கும் நன்றி.
வாணி போஜன் - விக்ரம் பிரபு விக்ரம் பிரபு ஸ்டார் குடும்பத்திலிருந்து வந்தவர். எப்படி இருப்பாரோ, என்ன பேசுவாரோ என்று பயந்தேன். ஆனால், அவர் மிகவும் அன்பாகப் பழகினார். அவரிடம் பணியாற்றியது அவ்வளவு சவுகரியமாக இருந்தது.
எந்தவொரு பந்தாவும் அவரிடமில்லை. காதல் காட்சிகள் நடிக்கும் போதும், எதுவாக இருந்தாலும் கேட்டுவிட்டுதான் நடிப்பார்.
விவேக் பிரசன்னா இந்தப் படத்தில் ஒரு வேடம் செய்திருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். மொத்த படக் குழுவுமே ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார்கள். எல்லோருமே கடின உழைப்பு தந்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு உங்கள் எல்லோருடைய ஆதரவும் வேண்டும்' என்றார்.
இதையும் படிங்க: ஓட்டு போடுவதற்காக படப்பிடிப்பை விரைவாக முடித்த விக்ரம் பிரபு