கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு, இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வீட்டிலிருந்து வெளியே வருகின்றனர்.
இதுதொடர்பாக, தற்போது இயக்குநர் விஜய் மில்டன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சமூகப் பாதுகாப்புக்காக நாம் தனித்திருப்பதை அதீதமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் எண்ணங்களில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. தீண்டாமை குடும்பப் பாதுகாப்பு என்ற போர்வையில் நம்முள் இறங்கிவிட்டது.
மனிதர்களை மந்தைகள் போல் கூட்டமாக்கிப் பூச்சி மருந்து தெளிப்பதையும், சொந்த ஊர்களுக்குத் திரும்ப விடாமல் கொட்டடியில் அடைப்பதையும் சரிதான் என்று நினைக்க ஆரம்பித்து விட்டோம். ஏற்கெனவே கயிறு கட்டியவன், கட்டாதவன் என வட்டம் போட்டுக் கொண்ட நாம் மேலும் சுருங்கி சுயநலமே பொதுநலம் என்றாகிக் கொண்டிருக்கிறோம்.