இயக்குநர் அருண்குமார் - நடிகர் விஜய் சேதுபதி மூன்றவாது முறையாக இணைந்துள்ள திரைப்படம் சிந்துபாத். ‘கே புரொடக்ஷன்ஸ்’ கே.ராஜராஜன் - ‘வான்சன் மூவீஸ்’ சான் சுதர்சன் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் நடிகை அஞ்சலி, விவேக் பிரசன்னா, லிங்கா, விஜய் சேதுபதியின் மகன் சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
விழாவில் விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், “அருண் வாழ்க்கையில் இடம் பெறக்கூடிய அழகான சம்பவங்களை ரசித்து, அதனை நேர்த்தியாக காட்சிப்படுத்த கூடிய திறமைசாலி. பண்ணையாரும் பத்மினியும் படத்தின் மூலம் அறிமுகமான அருண் பின்னர் எனக்கு சௌகரியமான நண்பராக மாறினார். என்னைத் தவிர்த்து வேறு நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்க கூறினேன். ஆனால் அவர் பிறர் மீது நம்பிக்கை வைக்கவில்லை.
சினிமாவில் தொடங்கிய எங்களின் நட்பு தற்போது அருணை எனது குடும்ப நண்பராக மாற்றியுள்ளது. அதனால் தான் என்னுடைய மகன் சூர்யாவை இந்த படத்தில் நடிக்க வைப்பதற்கு ஒப்புக்கொண்டேன். இதில் நான் நடிக்காவிட்டாலும் எனது மகன் சூர்யா நடித்திருப்பார். ஏனெனில் படத்தின் பணிகள் தொடங்குவதற்கு முன்பே அருண் இதுபற்றி என்னிடம் கூறியிருந்தார்.