சென்னை: விஜய் சேதுபதி நடித்துள்ள 'லாபம்' படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
தொழிற்சாலைகளால் விவசாயத்துக்கு ஏற்படும் பாதிப்புகளையும், அதன் பின்னணியில் இருக்கும் அரசியலையும் கதைகளமாக வைத்து உருவாகியுள்ளது 'லாபம்' திரைப்படம்.
இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு படங்களுக்குப் பிறகு எஸ். பி. ஜனநாதன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி - ஸ்ருதிஹாசன் பிரதான கதாபாத்திரத்தில் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லனாக நடித்துள்ளார். நடிகை தன்ஷிகா, 'மெட்ராஸ்' புகழ் கலையரசன், ரமேஷ் திலக், இயக்குநர் மாரிமுத்து, டேனி போப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்துக்கு இசை - டி. இமான். ஒளிப்பதிவு - ராம்ஜி. தயாரிப்பு - 7சிஎஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் பி. ஆறுமுககுமார் மற்றும் விஜய் சேதுபதி புரொடக்ஷன் சார்பில் விஜய் சேதுபதி.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பூஜையுடன் தொடங்கிய இந்தப் படம், தற்போது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இதையடுத்து படத்தை ஊரடங்கு முடிவுக்கு வந்து பின்பு வெளியிட முடிவு செய்துள்ளனர்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சிங்கிள் டிராக் பாடல், படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. தென்காசி, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகளில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.
படத்தில் விவசாயிகள் கூட்டம் நடைபெறுவது போல் இடம்பெறும் ஒரு காட்சிக்காக செட் போடாமல், நிஜமாகவே கட்டடம் ஒன்று கட்டப்பட்டு காட்சி எடுத்த பின்னர், அந்தக் கட்டடம் கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரமாக திகழும் விவசாய உற்பத்தியில் ஏற்பட்டிருக்கும் நலிவையும், விவசாயிகள் தற்கொலைக்கு பின்னணியில் இருக்கும் சர்வதேச அரசியலையும் 'லாபம்' படம் பேசும் என்று படத்தின் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் 2 நிமிடம் 47 விநாடிகள் ஓடும் இப்படத்தின் ட்ரெய்லரின் தொடக்கம் முதல் ஒவ்வொரு காட்சியிலும் அரசியல் அனல் தெரிக்கும் விதமான வசனங்களும், காட்சிகளும் இடம்பிடித்துள்ளன.
இதையும் படிங்க: நயன்தாராவின் பெயரில் ஒரு மிரட்டலான பேய் படம்!