சென்னை: மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லாபம்’. விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் மற்றும் 7 சிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், கலையரசன், தன்ஷிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு டி. இமான் இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தொழிற்சாலைகளால் விவசாயத்துக்கு ஏற்படும் பாதிப்புகளையும், அதன் பின்னணியில் இருக்கும் அரசியலையும் கதைக்களமாக வைத்து உருவாகியுள்ளது 'லாபம்' திரைப்படம். ஏற்கனவே, வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லரில் மிகப்பெரிய பொருளாதாரமாக திகழும் விவசாய உற்பத்தியில் ஏற்பட்டிருக்கும் நலிவையும், விவசாயிகள் தற்கொலைக்கு பின்னணியில் இருக்கும் சர்வதேச அரசியலையும் ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமான வசனங்களும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.