விஜய் - அட்லி கூட்டணியில் வெளியான மூன்றாவது திரைப்படம் 'பிகில்'. தீபாவளி ரிலீசாக கடந்த 25ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்ட இந்தப் படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இத்திரைப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு, கதிர், ஆனந்தராஜ், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களும் நடித்திருந்தனர்.
பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து உருவாகியிருந்த பிகில் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. எனினும் இப்படம் 300 கோடிக்கு ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் 'பாகுபலி 2' படத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையை 'பிகில்' படைத்துள்ளது.
தொடர்ந்து நான்காவது வாரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் தற்போது வரை தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 142.75 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அஜித் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான 'விஸ்வாசம்' திரைப்படம் மொத்தமாக 140 கோடி ரூபாயை வசூல் செய்திருந்த நிலையில், பிகில் அந்த சாதனையை தற்போது தகர்த்துள்ளது.
மேலும், இந்தாண்டு வெளியான தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்த படம் என்ற சாதனையை 'பிகில்' படைத்துள்ளது. முன்னதாக பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ திரைப்படம் இச்சாதனையை படைத்தது. மேலும் தென்னிந்திய மொழித் திரைப்பட நடிகர்களில் ரஜினி, பிரபாஸ், யாஷ் ஆகியோருக்குப் பிறகு இந்த சாதனையை படைக்கும் நான்காவது ஹீரோ என்ற பெருமையையும் விஜய் அடைந்துள்ளார். இது தவிர கேரளாவில் வெளியான தமிழ் படங்களின் வசூலில் 'பிகில்' முதலிடத்தில் உள்ளது.