எந்தத் துறையிலும் ஒரு புள்ளியை அடைந்துவிட்ட பிறகு வந்த பாதையையும், அதில் உடன் இருந்தவர்களையும் பெரும்பாலானோர் மறந்துவிடுவர். சிலர் எந்த நிலைக்கு சென்றாலும் வந்த பாதையை மறக்காமல் இருப்பார்கள். அந்த சிலரில் விஜயகாந்த் ஒருவர்.
தனது இளமை கால தோழனை பக்கத்திலேயே வைத்துக் கொண்டது, யார் கேட்டாலும் உதவி செய்வது என தனது பாதையிலிருந்து எந்தத் தருணத்திலும் விலகாமல் பார்த்துக்கொண்டார்.
மதுரை ரைஸ் மில்லில் நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி எப்படி இருந்தாரோ அப்படித்தான் விஜயகாந்தாக ஜொலித்தபோதும் இருந்தார். ரஜினி கமர்ஷியலில் அடித்து ஆட, கமல் ஹாசன் வித்தியாசமான முயற்சிகளில் முத்திரை பதிக்க உள்ளே வந்த விஜய்காந்த் தனக்கான ரசிகர் பட்டாளத்தை வலுவாக உருவாக்கி வைத்திருந்தது சாதாரண விஷயமில்லை.
அதற்கு அவரது திறமை ஒரு காரணம்தான். ஆனால், தயாரிப்பாளரிடமிருந்து ஷூட்டிங் முடிந்து பூசணிக்காய் உடைப்பவர்வரை அனைவரிடமும் ஏற்ற தாழ்வில்லாமல் பழகுவது, திரைப்படங்களில் பெரும்பாலும் எளிய கதாபாத்திரங்களை ஏற்பது என விஜயகாந்த் ரசிகர்களின் பார்வைக்கு அவர்களில் ஒருவராக தெரிந்தார்.
சினிமா வகுத்து வைத்திருக்கும் இலக்கணங்களுக்குள் சூப்பர் ஸ்டாராக இருத்தல் வேறு; அந்த இலக்கணங்களை உடைத்து சூப்பர் ஸ்டாராக இருத்தல் வேறு. விஜயகாந்த் இலக்கணங்களை உடைத்த நடிகர்களில் ஒருவர்.
விஜயகாந்துக்கு பெரிதாக நடனம் தெரியாதுதான். ஆனால், அவர் நடனம் ஆடும்போது சினிமா வகுத்து வைத்திருக்கும் இலக்கணங்களை மீறி ரசிகர்கள் அவரை ரசித்தனர்.
அதற்கு காரணம் அவரது வெள்ளந்தியான முகம்; உள்ளே இருக்கும் அதே மாதிரியான குணம். திரைப்பட கல்லூரியை நம்பி சென்ற மாணவர்கள் கல்லூரி முடித்து திரைப்படம் செய்கையில் யாரும் அவர்களை நம்பாத காலகட்டம் ஒன்று இருந்தது.
அந்த காலகட்டத்தில்தான் விஜயகாந்த் உச்ச நடிகராக இருந்தார். ஆனால் மற்றவர்கள் போல் அல்லாமல் அந்த மாணவர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் இயக்கிய திரைப்படங்களில் நடித்தார்.