ஜனங்களின் கலைஞன் எனப் போற்றப்படும் நடிகர் விவேக் நெஞ்சுவலி காரணமாக நேற்று (ஏப்ரல் 16) சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு எக்மோ மருத்துவ முறை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17) அதிகாலை 4.35 மணியளவில் காலமானார். இதனையடுத்து விவேக்கின் மரணத்திற்கு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் சமூகவலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகரும் அரசியில் கட்சித் தலைவருமான விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "நடிகர் விவேக்கின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பு. மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் விவேக் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன். ஈடு இணை செய்ய முடியாத அவரது இழப்பு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தமிழ் மீது அக்கறை கொண்டு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து 'சின்ன கலைவாணர்' என போற்றப்பட்ட நடிகர் விவேக்கிற்கு இணை வேறு எவரும் இல்லை.
தன்னலம் பார்க்காமல் சமூக அக்கறையோடு சேவை புரிந்து வந்த நடிகர் விவேக்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.