தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் வம்சி பைடிபள்ளி. இவரது இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த ’மகரிஷி’ திரைப்படம் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றது.
இவர் தற்போது விஜய்யை வைத்து புதிய படம் இயக்கவுள்ளார். 'பீஸ்ட்' படத்தைத் தொடர்ந்து தனது 66ஆவது படமாக வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தில் விஜய் நடிக்க அவருக்கு சம்பளம் ரூ. 120 கோடி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அவ்வாறு விஜய் ரூ. 120 கோடி சம்பளமாக பெறுவது உண்மையெனில் தென் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் முதல் இடத்தை விஜய் பிடிப்பார்.
விஜய்யை வைத்து வம்சி இயக்கும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளதாக தெரிகிறது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. விரைவில் இப்படம்குறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.