விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து நான்காவது முறையாக ஒன்றிணைந்து பணியாற்றியிருக்கும் திரைப்படம் 'க/பெ ரணசிங்கம்'. ரங்கராஜ் பாண்டே, வேல ராமமூர்த்தி, 'பூ' ராம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இத்திரைப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. சமூக அரசியல் பேசிய 'அறம்' திரைப்படத்தைத் தயாரித்த அதே தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் இந்தத் திரைப்படத்தையும் தயாரித்துள்ளது. ஜிப்ரானின் இசை டீஸர் எங்கும் ஒலிக்கிறது.
இரண்டு நிமிட டீஸரிலேயே படம் இதைக் குறித்துதான் பேச வருகிறது என்பதைப் பொட்டில் அடித்தாற்போல் இயக்குநர் கூறிவிட்டுச் செல்கிறார். தண்ணீர், காற்று, நிலம் ஆகியவை நாட்டுக்குள் மட்டும் அல்ல, சர்வதேச அளவிலும் அரசியலாக இருக்கிறது. நாட்டுக்குள் சாதி, மத அரசியல் முக்கியமானது என்றால், சர்வதேச அளவில் பஞ்ச பூதங்களில் முக்கியமான காற்று, தண்ணீர் ஆகியவை காலம் காலமாக அரசியல் செய்யக்கூடிய அம்சங்களாக இருந்துவருகின்றன. இதில் அதிகாரம் விளிம்பு நிலை மக்களை எப்படிச் சுரண்டுகிறது, மக்களின் கிளர்ச்சி எப்படியிருக்கும் என்பதை இயக்குநர் காட்டியிருக்கிறார்.