அம்பாசிடர் கார் மீதான காதலையும், வயதான வயதில் கணவன்-மனைவி இடையே உருவாகும் பக்குவமான காதலையும் கிராமிய பின்னணியில் சொல்லிய படம் 'பண்ணையாரும் பத்மினியும்'. இப்படத்தில் முதல் முறையாக இயக்குநர் அருண்குமாரும், நடிகர் விஜய் சேதுபதியும் இணைந்தனர். இந்த படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும், பெரிய வசூலை ஈட்டவில்லை.
அடுத்து விஜய் சேதுபதியை வைத்து 'சேதுபதி' என்னும் படத்தை இயக்கினார் அருண்குமார். இப்படத்தில் காவல் ஆய்வாளர் கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் விஜய் சேதுபதி. இவரின் முதல்படமான 'காக்கிச் சட்டை' படம் கூட வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில், 'சிந்துபாத்' என்னும் படத்தில் அருண்குமார்-விஜய் சேதுபதி வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. 'இறைவி' படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக அஞ்சலி விஜய் சேதுபதியின் ஜோடியாக நடித்துள்ளார். விஜய் சேதுபதியின் மகனும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ராஜராஜன் மற்றும் ஷான் சுதர்சன் இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. சிந்துபாத் படத்தை வரும் மே 16ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.