தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

HBD விஜய் சேதுபதி! - விஜய் சேதுபதி

ஒரு சில தோல்விகளைக் கண்டவுடனே சோர்ந்துவிடுவோருக்கு மத்தியில், "இதெல்லாம் ஒரு விஷயமே இல்லடா" எனும் மனநிலையைக் கொண்ட தமிழ் சினிமாவின் செல்லப்பிள்ளை விஜய்சேதுபதி குறித்து கீழே காண்போம்.

HBD விஜய் சேதுபதி!
HBD விஜய் சேதுபதி!

By

Published : Jan 16, 2022, 8:33 AM IST

சாமானியன் ஒருவன் திரையில் தோன்றும் நாயகனோடு தன்னை பொருத்திப் பார்ப்பது அரிது. அவ்வாறு பொருத்திப் பார்க்கப்படும் நாயகன் நட்சத்திர அந்தஸ்த்தை பெறுவதும் எழுதப்படாத விதி. அந்த வரிசையில் நட்சத்திர நாயகர்களாக உயர்ந்தவர்களில் விஜய் சேதுபதிக்கு தனி இடம் உண்டு.

ஆம்! சாமானியன் ஒருவன் திரையிலும், நிஜத்திலும் தன்னுடைய பிரதிபலிப்பை பார்ப்பதைப் போன்றே உணரச் செய்வதே விஜய் சேதுபதியின் மிகப்பெரிய பலம். அப்படிப்பட்ட யதார்த்த நாயகனை நமக்கு ஏன் இவ்வளவு பிடிக்கிறது என இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

அக்கௌண்டன்ட் டூ மக்கள் செல்வன்

எந்த ஒரு பின்புலமும் இல்லாமல், ஒருவன் சினிமாத் துறையில் தன் இருப்பை தக்க வைத்துக்கொள்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. அத்தகைய கலைஞனை சற்று கூடுதலாகவே மக்கள் கொண்டாட தவறுவதுமில்லை. அப்படியான கலைஞன்தான் விஜய் சேதுபதி.

எங்கோ ஓரிடத்தில் அக்கௌண்டன்டாக வேலை பார்த்தவர் இன்று தென்னிந்திய சினிமாக்களில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராகியுள்ளார். உளியிடம் அடி வாங்கி உயிர் பெற்ற சிலைபோல, வரிசைகட்டி நின்ற பிரச்னைகளே விஜய்சேதுபதியை திரைத்துறையில் மிளிரச் செய்துள்ளன.

எந்த ஒரு சூழலிலும் தனது திரைப்பயணத்தை மிகைப்படுத்திக் கூறாமல், ஜஸ்ட் லைக் தட் என கடந்து சென்றுவிடுவதே விஜய் சேதுபதியின் ஸ்பெஷல். ஆரவாரமின்றி தனது ரசிகனை உச்சிமுகர்பவன் என்பதாலேயே 'மக்கள் செல்வன்' எனும் பட்டம் கனக்கச்சிதமாய் பொருந்தி நிற்கிறது விஜய்சேதுபதியிடம்.

அவமானங்கள் மூலம் அனுதாபமா? நெவர்!

கடின உழைப்பாளிகள் எல்லோரும் விரும்பியதை அடைய முடியுமா என்பது கேள்விக்குறியே?. அவ்வாறு விரும்பியதை அடைந்தவரெல்லாம் கடின உழைப்பை விதைத்தவர் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. இலக்கை தேடி ஓடும் ஓர் கலைஞனின் வாழ்வில் அவமானம், நிராகரிப்பு, தோல்விகள் தவிர்க்க முடியாதது.

அவ்வாறு நிர்ணயித்த இலக்கை அடைந்த பின்னர், தான் சாதிக்க தடையாக இருந்த காரணிகள் குறித்து வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பதிவு செய்வர் கலைஞர்கள். சிலரோ இதெல்லாம் ஒரு தடையா? என எண்ணும் விஷயத்தைக் கூட மிகைப்படுத்திக் கூறி, அனுதாபத்தால் ரசிகர் பட்டாளத்தை சேர்க்க முயற்சிப்பர்.

இத்தகைய செயல்களிலிருந்து முற்றிலுமே மாறுபட்டவர் விஜய் சேதுபதி. எந்த ஒரு நொடியிலும் தனது கஷ்டங்களை ரொமாண்டிசைஸ் (romanticize) செய்யாத கலைஞன் இவர். உருவக்கேலி தொடங்கி பல்வேறு அவமானங்களை சந்தித்தபோதும், எங்கும் அதனை காரணியாகக் கொண்டு அனுதாபம் தேட முயற்சிக்காதவர்.

ஒரு சில தோல்விகளைக் கண்டவுடனே சோர்ந்துவிடுவோருக்கு மத்தியில், "இதெல்லாம் ஒரு விஷயமே இல்லடா" எனும் மனநிலையைக் கொண்ட தமிழ் சினிமாவின் செல்லப்பிள்ளை.

நாயக பிம்பத்தை உடைத்தெறிந்த நாயகன்

மார்க்கெட் வேல்யூ என்ற ஒரு பதம் சினிமாவில் உண்டு. ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு சில விதமான கதாபாத்திரங்களே பொருந்தும், அதனை வைத்தே லாபம் பார்க்க முடியும் என்பதே அது. இத்தகைய வளையத்துக்குள் சிக்கிய பல நடிகர்கள், திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிக்க இயலாமலே சென்று விடுவதுண்டு.

உதாரணமாக "சாக்லேட் பாய்" எனும் பட்டம் சாபக் கேடானது எனப் பல ஹீரோக்கள் கூற கேட்டிருப்போம். இத்தகைய பிம்பங்களில் சிக்குவதையோ, தனது திரைப்படங்களில் மேலோங்கிய வர்த்தக நோக்கமோ இருக்க கூடாது என்பதில் தெளிவாக இருப்பவர் விஜய் சேதுபதி.

இந்த எண்ணமே ஆரஞ்சு மிட்டாய், சீதக்காதி, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை, சூப்பர் டீலக்ஸ், சூது கவ்வும் உள்ளிட்ட பல வித்தியாசமான திரைக்கதைகளை கொண்ட படங்களை காண காரணமாக அமைந்தது.

ஆஃப் ஸ்க்ரீனிலும் கெத்து...

மக்களை மகிழ்விக்கும் கலைஞன், மக்களுக்கான பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்பான் என்பது விஜய் சேதுபதிக்கு 100 சதவீதம் பொருந்தும். சாதியம், மத அரசியலுக்கெதிராக இவர் தெரிவித்த கருத்துக்கள், அரசியல் வட்டார ரீதியாக பல்வேறு அழுத்தங்களை கொடுத்தது.

இருப்பினும் அதற்கெல்லாம் அஞ்சாமல் “மனிதனைக் காப்பாற்ற இன்னொரு மனிதன்தான் வருவான்” என மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் பேசி, தன் மனதுக்கு சரியெனப்பட்டதை பதிவு செய்ய ஒருபோதும் தவறாதவர்.

ஏன் விஜய்சேதுபதியை பிடிக்கும் என்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஓர் காரணம் உண்டு. கலைஞனை வாழ்த்த காரணம் அவசியமா என்ன?. இன்று தனது 44ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் விஜய் சேதுபதிக்கு ஆயிரமாயிரம் அன்பு முத்தங்கள் பரிசாக கிடைக்கட்டும். #HbdVijaySethupathi.

ABOUT THE AUTHOR

...view details