ஓடிடியில் வெளியாகும் 'க/பெ ரணசிங்கம்' - க/பெ ரணசிங்கம்
சென்னை: விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'க/பெ ரணசிங்கம்' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து நான்காவது முறையாக ஒன்றிணைந்து பணியாற்றியிருக்கும் திரைப்படம் 'க/பெ ரணசிங்கம்'. அறிமுக இயக்குநர் விருமாண்டி இயக்கியுள்ள இப்படத்தில் ரங்கராஜ் பாண்டே, வேல ராமமூர்த்தி, 'பூ' ராம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமூக அரசியல் பேசிய 'அறம்' திரைப்படத்தைத் தயாரித்த அதே தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் இந்தத் திரைப்படத்தையும் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசரில் தண்ணீர், காற்று, நிலம் ஆகியவை நாட்டுக்குள் மட்டும் அல்ல; சர்வதேச அளவிலும் அரசியலாக இருக்கிறது. நாட்டுக்குள் சாதி, மத அரசியல் முக்கியமானது என்றால், சர்வதேச அளவில் பஞ்ச பூதங்களில் முக்கியமான காற்று, தண்ணீர் ஆகியவை காலங்காலமாக அரசியல் செய்யக்கூடிய அம்சங்களாக இருந்துவருகின்றன.
அதிகாரம் விளிம்புநிலை மக்களை எப்படிச் சுரண்டுகிறது, மக்களின் கிளர்ச்சி எப்படியிருக்கும் என்பதை இயக்குநர் அழகாக விவரித்துள்ளார்.
டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே நெட்டிசன்களையும் ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. அதுமட்டுமல்லாது படம் குறித்தான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
'க/பெ ரணசிங்கம்' திரைப்படம் ஜீ ப்ளக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகி உள்ளது. திரையரங்கு பாணியில் காட்சிக்கு கட்டணம் செலுத்திப் பார்க்கும் முறையாகும். இந்த பாணியில் வெளியாகும் முதல் தமிழ் படமாக ஓடிடி தளத்தில் 'க/பெ ரணசிங்கம்' அமைந்துள்ளது.