சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'மாஸ்டர்'. இதில் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் ஜனவரி 13ஆம் தேதி வெளியான இப்படம் வசூலில் சாதனைபுரிந்தது. அதுமட்டுமல்லாது நீண்ட மாதங்களாக திரையரங்குகளில் பெரிய படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில், 'மாஸ்டர்' வெளியாகி திரையரங்குகளை மீட்டது.
இதற்கிடையில், படம் திரையரங்கில் வெளியாகி குறைந்த நாள்களிலேயே ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் வெளியானது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்தனர். இருப்பினும் தமிழ்நாடு முழுவதும் 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மாஸ்டர் திரைப்படம் இன்னும் திரையிடப்படுகிறது.
இதுவரை 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல்செய்த இப்படம் இன்று (மார்ச் 3) 50ஆவது நாளை கொண்டாடுகிறது. இதனையடுத்து ரசிகர்கள் சமூகவலைதளத்தில் #Master50thday என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடிவருகின்றனர்.
'மாஸ்டர்' படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து மாஸ்டர் படத்தின் க்ளைமேக்ஸ் மேக்கிங் வீடியோவைப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.