சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'மாஸ்டர்'. இதில் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூலில் சாதனைபுரிந்தது. அதுமட்டுமல்லாது நீண்ட மாதங்களாக திரையரங்குகளில் பெரிய படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில், 'மாஸ்டர்' படம் வெளியாகி திரையரங்குகளை மீட்டது.
இதற்கிடையில், படம் திரையரங்கில் வெளியாகி குறைந்த நாள்களிலேயே ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் வெளியானது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்தனர். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எடுக்கப்பட்டு சில நிபந்தனைகளும் போடப்பட்டன. அதன்படி, பெரிய பட்ஜெட் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 50 நாள்களுக்குப் பிறகும், சிறிய பட்ஜெட் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 30 நாள்களுக்குப் பிறகும் ஓடிடியில் வெளியிட வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது.