சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சூரரைப் போற்று'. இதில் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, காளிவெங்கட், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஏர் டெக்கான் என்ற பெயரில் குறைந்த கட்டணத்திலான விமான சேவையை தொடங்கிய கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் அவரது வாழ்க்கையில் எதிர்கொண்ட போராட்டங்களை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளது.
அமேசன் ப்ரைமில் தீபாவளி வெளியீடாக நவம்பர் 12ஆம் தேதி வெளியானது. ஓடிடி தளத்தில் படத்தை பார்த்த ரசிகர்களும் திரைப் பிரபலங்களும் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர்.
அந்த வகையில், விஜய் தேவரகொண்டா இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தனது சமூக வலைதளப்பக்கத்தில், "'சூரரைப் போற்று' திரைப்படத்தை என் பெரிய நண்பர்கள் கூட்டத்தோடு பார்த்தேன். அனைவரும் ஆண்கள். மூன்று பேர் படம் பார்த்து அழுதனர். வெளியிலிருந்து வரும் ஒரு ஆள் சாதிப்பதைப் பார்த்து நான் படம் முடியும்வரை உணர்ச்சி மிகுதியில் இருந்தேன்.
சூர்யா அண்ணா, என்ன ஒரு அட்டகாசமான நடிகர். ஒரு நடிகராக முழு அர்ப்பணிப்பையும் தந்து நடிக்கும்போது அவர் மீது அன்பை மட்டுமே உணர முடியும். அதைத் தயாரிப்பாளராகவும் ஆதரித்தது முக்கியமானது.
அபர்ணா பாலமுரளி போன்ற அற்புதமான பெண்களை சுதா எங்கே தேடிப் பிடிக்கிறார். என்று அதிசயிக்கிறேன். மிகவும் இயல்பாக தனது நடிப்பின் மீது முழு கட்டுப்பாடு இருப்பவராகத் தெரிகிறார். சுதா உங்களுடன் விரைவில் பணியாற்றுவேன். ஒரு இயக்குநராக உங்கள் மீது எனக்கிருக்கும் வியப்பு இது.
ஜி.வி. பிரகாஷின் உயர்தரமான இசை, நிகேத் பூமியின் சிறப்பான ஒளிப்பதிவு, துணை நடிகர்களின் உயர்ந்த நடிப்பு. இதில் எவ்வளவு உண்மை எவ்வளவு கற்பனை என்பது எனக்குத் தெரியாது. எனவே சிம்ப்ளி பிளை (Simply Fly) புத்தகத்தை வாங்கியிருக்கிறேன். தமிழ் தெலுங்கில் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்" எனப் பதிவிட்டுள்ளார்.