கரோனா தொற்றினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சாதாரண குடும்பத்து மக்கள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு திரைப்பிரபலங்கள் தங்களாலான உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சாதாரண குடும்ப மக்களுக்கு இதுபோன்ற ஒரு அசாதாரணமான சூழ்நிலையில் உதவுவதற்காக நடிகர் விஜய் தேவரகொண்டா தனது தேவரகொண்டா அறக்கட்டளை மூலமாக உதவும் கரத்தினை நீட்டியுள்ளார். அதன்படி https://thedeverakondafoundation.org. என்ற இணையதளம் மூலம் எளிய மக்களுக்கு உதவ கொடையாளர்கள் முன்வரலாம் என தெரிவித்து தனது சார்பில் 1.30 கோடி ரூபாயை நிதியாக வழங்கினார்.
இதையடுத்து மக்கள் பலரும் அதிகளவில் நிதி அளித்ததை அடுத்து தனது ட்விட்டர் பதிவில் ரூ. 40 லட்சம் நிதியாக வந்துள்ளதாக நடிகர் விஜய் தேவரகொண்டா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். முன்னதாக 2,000 குடும்பங்களுக்கு உதவி செய்வதாக இருந்த நிலையில் அதிகளவில் நிதி வருவதால் தான் நிர்ணயம் செய்திருந்த நிதி தொகையின் அளவை அதிகரித்திருப்பதாகவும், 2,000 குடும்பங்களில் இருந்து எண்ணிக்கையை அதிகரித்து 4,000 குடும்பங்களுக்கு உதவி செய்யவிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஒவ்வொரு நாளும் இரவு 9 மணிக்கு நிதி வருகை குறித்த தகவலை வெளியிட்டு மக்களின் பலத்தை காண்பிப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து தேவரகொண்டா அறக்கட்டளைக்கு 1 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கிய கொடையாளர் குறித்த செய்தியையும் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க... பிரபாகரன் பெயர் விவகாரம்: மன்னிப்புக் கோரிய துல்கர் சல்மான்