'பெல்லி சூப்புலு' படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டா. இப்படத்தின் மூலம் தனக்கென்று ஒரு தனிப்பாணியை கடைப்பிடித்து வந்தாலும் 'அர்ஜீன் ரெட்டி' படம்தான் அவரை இந்தியா முழுவதும் பிரபலமடைய வைத்தது. காதல் தோல்வி, கோபம், தேவதாஸ் வாழ்க்கை என மூன்று விதமான பரிணாமத்தில் அர்ஜீன் ரெட்டியாகவே விஜய் தேவரகொண்டா வாழ்ந்திருப்பார்.
நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை படமான 'மகா நடி' படத்திலும் விஜய் தேவரகொண்டாவின் கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
இதையடுத்து, இவர் நடித்த 'கீதா கோவிந்தம்', 'டாக்ஸி வாலா' ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின. அதுவும் கீதா கோவிந்தம் படத்தில் இடம்பெற்ற 'இன்கேம் இன்கேம் காவாலே' பாடல் பட்டி தொட்டியெங்கும் கலக்கிவருகிறது. 'கீதா கோவிந்தம்' படம் வெளியாகி சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் இந்த பாடலை ரசிகர்கள் தங்களது போன்களில் ரிங்டோனாக ஒலிக்க வைத்து பலரையும் பரவசப்படுத்துகின்றனர்.