நடிகை ராய்லட்சுமி நடித்த 'நீயா 2' திரைப்படம் இம்மாதம் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் ராய் லட்சுமி ஸ்ரீகாந்துடன் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி நடித்துவருகிறார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
லட்சுமி ராய் புதியதாக நடிக்கும் படத்திற்கு 'மிருகா' என்று பெயரிடப்பட்டுள்ளது. காடுகளின் பின்னணியில் புலி, ராய்லட்சுமியின் ஆவேச தோற்றத்துடன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
ஸ்ரீகாந்த், ராய்லட்சுமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, ஒளிப்பதிவுப் பணிகளை பன்னீர்செல்வம் கவனித்துக் கொள்ள, படத்தை பார்த்திபன் இயக்கியுள்ளார். அருள்தேவ் இசையில் சுதர்சன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை வினோத் ஜெயின் தயாரித்துள்ளார்.
சமீபத்தில் ராய்லட்சுமி பிறந்தநாளை முன்னிட்டு வெளியான சிண்ட்ரெல்லா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.