இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான படம் 'பிச்சைக்காரன்'.
இப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து இசையமைத்திருந்தார். இதில் விஜய் ஆண்டனியுடன் சாட்னா டைட்டஸ், பகவதி பெருமாள், முத்துராமன், தீபா ராமானுஜம் உள்ளிட்டப் பலர் நடித்திருந்தனர்.
பிச்சைக்காரனால் விஜய் ஆண்டனிக்கு கிடைத்த அங்கீகாரம்
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தையடுத்து விஜய் ஆண்டனி தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரத் தொடங்கினார்.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமாக 'பிச்சைக்காரன் 2' படத்திற்கான கதை, திரைக்கதையை விஜய் ஆண்டனியே கரோனா ஊரடங்கு காலத்தில் எழுதி முடித்தார்.
இப்படத்தை தேசிய விருது வென்ற இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசாமி இயக்குவதாக இருந்தது. அதன்பின் ஆனந்த் கிருஷ்ணன் இயக்குநராகப் பொறுப்பேற்றார்.
தற்போது அவரும் இதிலிருந்து விலகவே 'பிச்சைக்காரன் 2' படத்தை இயக்கப்போகும் இயக்குநர் யார் என்பதை இயக்குநர் முருகதாஸ் நாளை (ஜூலை.24) அறிவிக்கவுள்ளார். நாளை விஜய் ஆண்டனியின் பிறந்தநாளும் கூட.
'கர்ணன்' பட ஒளிப்பதிவாளரோடு கூட்டணி
விஜய் ஆண்டனி தயாரிக்கும் 'பிச்சைக்காரன் 2' தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக உள்ளது. விஜய் ஆண்டனியே படத்திற்கு இசையமைக்கிறார். 'கர்ணன்' திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் இப்படத்தில் ஒளிப்பதிவுப்பணிகளை செய்யவுள்ளார்.
விஜய் ஆண்டனி நடித்த படங்களிலேயே மிக அதிக பொருள் செலவில் தயாராகும் படம் 'பிச்சைக்காரன் 2'. மேலும் இப்படத்திற்காக விஜய் ஆண்டனி பத்து முதல் பதினைந்து கிலோவரை உடல் எடையை குறைக்கவுள்ளார்.
இசையமைப்பாளர், நாயகன், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மையுடன் தமிழ்சினிமாவில் வலம் வந்துகொண்டிருந்த விஜய் ஆண்டனி 'பிச்சைக்காரன் 2' படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதின் மூலம் கதை ஆசிரியராகவும் வலம் வர உள்ளார்.
இதையும் படிங்க: 'வீடியோவில் கலாய்த்த யுடியூபர்' - விஜய் ஆண்டனியின் ரியாக்ஷன்..!