மும்பை: ஸ்ருதிஹாசன் இந்தியில் நடித்து வரும் 'யாரா' என்ற படத்திலிருந்து ரொமாண்டிக்கான டைட்டில் ட்ராக் வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டில் வெளியான பிரான்ஸ் மொழிப் படமான 'கேங்க் ஸ்டாரி' படத்தின் ரீமேக்காக 'யாரா' என்ற பெயரில் இந்தியில் புதிய படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் கதையின் நாயகனாக வித்யூத் ஜாம்வாலும், நாயகியாக ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார்கள். வித்யூத் ஜாம்வால் தமிழில் தல அஜித் நடித்த பில்லா 2, தளபதி விஜய் நடித்த துப்பாக்கி ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருந்தார்.
சவுக்தி கேங்க் என்று அழைக்கப்படும் குற்றம் புரியும் குழுவில் இருக்கும் நான்கு நண்பர்களின் வாழ்க்கை, அவர்கள் சென்ற உச்சம் மற்றும் அடைந்த வீழச்சியை கூறும் விதமாக இந்தப் படம் அமைந்துள்ளது. இந்தப் படத்திலிருந்து டைட்டில் பாடலாக 'பிஹேதி' என்று தொடங்கும் 2 நிமிட வீடியோவை நடிகர் வித்யூத் ஜாம்வால் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
படத்தின் பிரதான கதாபாத்திரங்களான வித்யூத் ஜாம்வால், ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கிடையேயான ஆழமான காதலை, பாடலில் காட்சிகளாக காட்டியுள்ளனர். மிகவும் ரொமாண்டிக்காக அமைந்துள்ள இந்தப் பாடலில் வித்யூத் - ஸ்ருதி ஆகிய இருவரும் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளனர். அங்கித் திவாரி இசையமைத்து பாடியுள்ள இந்தப் பாடலை, பாடகி ஐஸ்வர்யா மஜூம்தரும் இணைந்து பாடியுள்ளார்.
இதையும் படிங்க:யூடியூப் சேனல் தொடங்கிய நடிகை ஸ்ருதி ஹாசன்!