தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக வெளியானது அசுரன். ரசிகர்களின் பாராட்டைப் பெற்று சூப்பர் ஹிட்டானது. வசூலிலும் கலக்கியது.
மேலும் சிறந்த படம், சிறந்த நடிகர் என்னும் இரண்டு தேசிய விருதுகளை இந்தப் படம் வென்றது. தற்போது இந்தப்படம் தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் ரீமேக்காக 'நாரப்பா' என்ற பெயரில் உருவாகிவருகிறது. வெங்கடேஷின் 74ஆவது படமாக இப்படம் உருவாகிவருகிறது.
கலைப்புலி தாணு தெலுங்கு பதிப்பையும் தயாரிக்கிறார். இப்படத்தை ஸ்ரீகாந்த் அட்லா இயக்குகிறார். மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிரியாமணி. கரைப்பல், கையில் அரிவாளுடன் நடிகர் தனுஷ் உக்கிரமான முகத்துடன் நடந்துவரும் தமிழ் 'அசுரன்' பட போஸ்டர் போன்று தெலுங்கிலும் அதே பாணியில் வெங்கடேஷ் கோபத்துடன் நடந்துவரும் போஸ்டர், டீசர் என நாரப்பா படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இப்படம் மே 14ஆம் தேதி வெளியாகும் எனவும் ட்ரெய்லர் விரைவில் வெளியிடப்படும் எனவும் படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்படுவதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கரோனா பரவல் காரணமாக இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியை தள்ளிவைப்பதாகவும் தற்போது உள்ள சூழல் கட்டுக்குள் வந்ததும் சரியான நேரத்தில் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவிப்பதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.