இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில், 2010 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் தேதி வெளியான படம் 'இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்'. பெரும் பொருட்செலவில் உருவான இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில், லாரன்ஸ், பத்மப்ரியா, லட்சுமிராய், எம்.எஸ் பாஸ்கர், சந்தியா, இளவரசு, செந்தில், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழில் 1972 ஆம் ஆண்டு ஜெய் ஷங்கரின் 'கங்கா' என்னும், கெளபாய் படத்திற்குப் பின் 'இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்' கெளபாய் படம் வெளியானது. அப்போது, படம் பார்த்து இயக்குநர்கள் கே.பி பாலசந்தர், மகேந்திரன், பாலுமகேந்திரா ஆகிய மூவரும் சிம்புதேவனை பாராட்டி கடிதம் எழுதியுள்ளனர். இன்றுடன் (மே 9) இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படம் வெளியாகி பத்து வருடங்களாகின.
தற்போது இந்தக் கடிதத்தை சிம்புதேவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாலசந்தர்:
"எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். எப்படி தான் இத்தனை சிங்களையும் (நடிகர் நடிகைகளையும்) ஒரு கூண்டுக்குள் அடைத்து வைத்து வேலை வாங்கியிருக்கிறீர்களோ, எப்படியென்று எனக்குப் புரியவில்லை. இதுவே ஒரு அசுர சாதனை. யதார்த்தமான ஒரு களத்தில் செயற்கையாக அடிக்கும் கூத்தும் கும்மாளங்களும் முற்றிலும் மாறுபட்ட வகையில், ஒரு செயற்கையான கற்பனைக்களத்தில் வினாடிக்கு வினாடி குபீர் சிரிப்புகளையும் யதார்த்தமாக வரவழைத்து குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைப்பது என்பது ஒரு அதி அற்புதமான கலை. அதில் 100 விழுக்காடு வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.
இசை இயக்குநர், கலை இயக்குநர், லாரன்ஸ், எம்.எஸ் பாஸ்கர் ஏனைய நடிகர் நடிகைகளின் பங்கும் மகத்தானவை. படம் முழுவதும் Sepia வண்ணத்தை உபயோகித்திருப்பது, அந்த CowBoy Ambience-ற்கு அழகு சேர்திருக்கிறது. தயாரிப்பாளர் அகோதரத்தின் அசாத்திய நம்பிக்கைக்கு Hats Off. Keep it Up Mr. Simbu."