சென்னை முழுவதும் நாளுக்கு நாள் தண்ணீர் பஞ்சம் தீவிரமடைந்து வருகிறது. தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட தண்ணீர் பற்றாக்குறையுடன் வாழக்கூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டால் உணவகங்கள், ஐடி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தண்ணீருக்காக சென்னை மக்கள் படும்பாடு வார்த்தைகளால் விவரிக்க முடியாத வேதனையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், நடிகர் அஜித் ரசிகர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் 'வீர சென்னை தல அஜித் வெல்ஃபேர் அசோசியேஷன்' சார்பில் வடசென்னை மக்களுக்கு தினமும் இலவச குடிநீர் வழங்கி வருவது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
பெண்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் என அனைவரும் தண்ணீருக்காக படும் அவல நிலையை புரிந்துகொண்டு சமூக நோக்கத்தோடு தாமாக முன்வந்து அஜித் ரசிகர்கள் செய்யும் இந்த உதவியினை அப்பகுதி மக்கள் மனதார பாராட்டி வருகின்றனர். அஜித்திற்காக பேனர் வைப்பது, அன்னதானம் செய்வது, பட முதல்நாள் ரீலிஸ் என்றால் ஆட்டம் போடுவது, விஜய் ரசிகர்களோடு சமூக வலைதளத்தில் சண்டை போடுவது என்று எங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம். இதுபோன்ற உதவிகளும் செய்வோம் என்று நிரூபித்துள்ளனர். நாங்க தருதலைகள் கிடையாது தல ரசிகர்கள் என்ற தோணியில் மாஸ் காட்டியுள்ளனர்.
தற்போது இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.