பண்டைய தமிழகர்களின் வாழ்க்கை முறை பள்ளிப்படிப்பின்போது தமிழ்ப் பாடங்களில் படித்தது நினைவிருக்கலாம். ஐந்திணைகள் அடிப்படையில் அப்பகுதி மக்களின் வாழ்வியல் முறைகளை எழுத்துகள் மூலமாக படித்து அறிந்திருக்கிறோம். அதையே வெள்ளித்திரையில் காட்சிப்படுத்தி பார்வையாளர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை ஏற்படுத்த முயற்சித்த படங்களில் முக்கியமானதாக அரவான் இருக்கிறது.
எழுத்தாளர் சு. வெங்கடேசன் எழுதிய சாகித்ய அகாதமி விருது வென்ற ’காவல் கோட்டம்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு, கற்பனை கலந்து இந்தப் படத்துக்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருந்தார் இயக்குநர் வசந்தபாலன். வெயில், அங்காடித் தெரு என இரண்டு சிறந்த படைப்புகளையும், உரிய அங்கீகாரத்தையும் பெற்றதற்கு பின் தன் மீது ஏற்பட்ட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்கு அவர் 18ஆம் நூற்றாண்டில் தென் தமிழர்களின் வாழ்வியலை கதைக்களமாக எடுத்துக்கொண்டார்.
வரலாற்று கதையை செல்லுலாய்டில் பதிவதென்பது அவ்வளவு சாதாரண காரியமில்லை. அதுவும் நாவலாக புத்தக வடிவில் எழுத்துகளாக பதிவுசெய்யப்பட்டது வாசகர்கள் மனதில் கற்பனை காட்சிகளாக பல்வேறு பரிமாணங்களில் உலா வருவதை திரைவடிவமாக ஒரே நேர்கோட்டில் கொண்டுவந்து பார்வையாளர்களை ரசிக்க வைப்பது சவாலான விஷயம். இதன் காரணாமாகவே தமிழில் நாவலை படமாக்கும் முயற்சிகள் அரிதான நிகழ்வாகவே இருக்கிறது.
கதைக்களம், காலம், கதாபாத்திரங்கள் மீது நம்பகத்தன்மை கொஞ்சம் குறைந்தாலும் ஒட்டுமொத்த படமும் பார்வையாளர்களுக்கு சலிப்பை தந்துவிடும். அந்த வகையில் நாவலில் கூறப்பட்டதையும், தனது கற்பனையையும் வெகுஜன மக்களுக்கு புரியும் வண்ணம் அரவான் படத்தை உருவாக்கியிருப்பார் வசந்தபாலன்.
தமிழர் வாழ்வியல் படம் என்பதாலேயே தமிழரின் பெருமை என்று பேசாமல் களவை தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வந்த சமூகத்தை வைத்து படத்தின் கதையை கூறியிருப்பார். களவு செய்து அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து வரும் கூட்டம், களவுக்காக அவர்கள் தீட்டும் திட்டங்கள், எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நுணுக்கமாக களவு மேற்கொள்ளும் முறை என்று முதல் பாதி திருட்டு தொழிலைப் பற்றி விவரமாக குறிப்பிட்டிருந்தாலும், இப்படியும் ஒரு சமூகம் வாழ்ந்ததன் அடையாளம் பற்றி சுவாரஸ்ய பாணியில் காட்டப்பட்டிருக்கும்.
இந்த களவு கூட்டத்தினுள் சேரும் வேற்று ஊர் மனிதனான கதையின் நாயகன் ஆதியின் கதையை மையப்படுத்தி பின்பாதியில் பல முடிச்சுகளோடும், கிளைக்கதைகளோடும் பயணப்படிருக்கும்.
ஒவ்வொரு குற்றத்துக்கு பின்னணியிலும் ஏற்கனேவே திட்டமிடப்பட்ட மறைமுக குற்றங்கள் ஒளிந்திருக்கின்றன என்பதுபோல் இந்தப் படத்திலும், வரிப்புலியாக முதல் பாதியில் கலகலப்பூட்டும் ஆதி, பிற்பாதியில் சின்னான் கதாபாத்திரத்தில் பல முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு காரணான மையப்புள்ளியாகத் திகழ்வார்.
கேமியோ கதாபாத்திரத்தில் தோன்றும் அஞ்சலி, பரத் வெறும் காட்சிக்காக மட்டுமில்லாமல், கதையோட்டத்தின் முக்கிய புள்ளியாக திகழ்வதும், அவர்களால் ஏற்படும் வினைக்கு பலிகடாவாக யார் ஆகிறார்கள் என்பதை குட்டிக் குட்டிக் கதைகளாக யதார்த்தமாக விவரித்திருப்பார்கள்.
ஒவ்வொரு ஊரிலும் தனிச் சமூகம் என்று வாழ்ந்து வந்த அந்தக் காலத்தில், இரு ஊர்களுக்கிடையேயான பிரச்னை தீர்த்து வைக்கும் பாளையக்காரர் ஊர்மக்களுக்கு ராஜாவாகவும், கடவுளாகவும் பாவிக்கப்பட்டார். அதுபோன்றதொரு பாளையக்காரரின் சூழ்ச்சி, தனது பாளையத்து மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பாங்கு என அவர்களின் டீடெய்லிங்கும் காட்டப்பட்டிருக்கும்.
ஜல்லிக்கட்டு வெறும் போட்டி மட்டுமல்ல அது ஊர்மக்களின் கெளரவமாக பார்க்கப்பட்ட விதம், செய்யும் தொழில் களவாக இருந்தாலும் அதை குழுவாக திட்டமிட்டு செய்யும் நுணுக்கம், இழப்பால் திருந்தி வாழும் சமூகம், ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் நடுகல் வழிபாட்டில் இருக்கும் பின்னணி என பல்வேறு அம்சங்கள் தமிழர்கள் தங்களது வாழ்வியலில் கடைபிடித்த விஷயங்களை ஒட்டி அமைந்திருக்கும்.