தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

‘சினிமா எனக்கு வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்தது’ - நடிகர் வசந்த் ரவி

ராம் இயக்கத்தில் வெளிவந்த ‘தரமணி’ படத்தில் நடித்த வசந்த் ரவி தனது திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

vasanth ravi

By

Published : Oct 27, 2019, 2:17 PM IST

உங்களைப் பற்றி?

சொந்த ஊர் திருநெல்வேலி. வளர்ந்தது, படித்தது சென்னை. ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தேன். சிறு வயது முதலே சினிமா மீது ஆர்வமிருந்தாலும் முதல் வருடம் படித்துக் கொண்டிருக்கும்போதே நடிப்பின் மீது ஆர்வம் வந்தது. ஆனால், எனது பெற்றோருக்கு பிடிக்கவில்லை. எது செய்வதாக இருந்தாலும் மருத்துவம் படித்துவிட்டு செய் என்றார்கள். அவர்கள் கூறியதுபோல நானும் படித்து முடித்தேன்.

நடிகர் வசந்த் ரவி

சினிமா துறைக்கு வந்தது எப்படி?

டாக்டருக்கு படித்து முடித்த பின்பும் நடிப்பின் மீதிருந்த ஆர்வம் குறையாததால் மும்பைக்குச் சென்று அனுபம்கேர் நடிப்பு பள்ளியில் பயிற்சி மேற்கொண்டேன். பின்பு ராஜீவ் மேனனிடமும் பணியாற்றினேன். ஆனால், பெற்றோர்கள் மருத்துவம் மட்டும் போதாது மருத்துவ மேற்படிப்பும் படிக்க வேண்டும் என்றார்கள். ஆனால், நான் மருத்துவமே படித்தால் அந்த துறையிலிருந்து வரமுடியாது என்ற காரணத்தால் மருத்துவம் சார்ந்து ஹெல்த் கேர் மேனேஜ்மேண்ட் படித்தேன்.

பிறகு சென்னையில் ஒரு பிரபல மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அவ்வப்போது இயங்குநர் ராமை சந்தித்து வந்தேன். ஒரு நாள் ஆடிசன் செய்தார். என்னுடைய அடுத்த படத்தில் நீ தான் நாயகன் என்றார். அந்த தருணத்தில் என் வாழ்க்கை மாறிவிட்டது.

நடிகர் வசந்த் ரவி

'கற்றது தமிழ்' படத்தைப் பார்த்ததும் இந்த இயக்குநரிடம் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். அது என் முதல் படத்திலேயே அமைந்தது என் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். 'தரமணி' படத்தின் கதையையும் எனது கதாபாத்திரத்தையும் கூறினார்.

கதை, இயக்குநர், கதாநாயகன் என்று எல்லாமே தயாராகவுள்ள நிலையில் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. அப்போது தான் 'தங்க மீன்கள்' வெளியாகியது. அதைப் பார்த்து விட்டு அப்படத்தின் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. நானே 'தரமணி'யையும் தயாரிக்கிறேன் என்று கூறினார். சினிமாத் துறைக்கு வந்த பிறகு வாழ்க்கை என்றால் என்ன என்பதைக் கற்றுக்கொண்டேன்.

நடிகர் வசந்த் ரவி

தரமணி படத்திற்குப் பின் உங்கள் படம் வெளியாகவில்லையே ஏன்?

படம் வெற்றியடைந்து உலகளவில் சென்று சேர்ந்தது. என் கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. விமர்சன ரீதியாகவும் பாராட்டு கிடைத்ததோடு பல விருதுகளும் கிடைத்தது. அதன் பிறகு 40க்கும் மேற்பட்ட கதைகளைக் கேட்டும் 'தரமணி' படத்திற்கு இணையாக இருக்க வேண்டுமென்பதில் கவனமாக இருந்தேன். அப்படி நான் எதிர்பார்த்தது போல் அமைந்தது 'ராக்கி'.

'ராக்கி' படம் குறித்து?

தியாகராஜன் குமாரராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். அவர் இறுதிச் சுற்று படத்தில் வசனம் எழுதியிருக்கிறார். அவர் கதைக் கூறியதும் இப்படம் சரியான தேர்வாக நிச்சயம் இருக்கும் என்று எனக்குள் உள்ளுணர்வு தோன்றியது. இப்படம் பழி வாங்கக் கூடிய கேங்ஸ்டர் பின்னணி கொண்ட படம். பாரதிராஜா வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இறுதிக் கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் திரைக்கு வரும்.

நடிகர் வசந்த் ரவி

தரமணி - ராக்கி எப்படி பார்க்கிறீர்கள்?

'தரமணி'யோடு 'ராக்கி'யை ஒப்பீடு செய்தால் இது முற்றிலும் வேறுபட்ட கதை. இதேபோல் இனி நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பேன். என்னுடைய கனவு பாத்திரம் சூப்பர் ஹீரோ கதையில் நடிப்பது தான். எனது கதாபாத்திரம் பிடித்திருந்தால் இரண்டு நாயகர்களில் ஒருவராக மற்றும் பல நாயகர்களுடன் இணைந்து நடிப்பேன்.

தரமணி படத்தை உங்கள் பெற்றோர்கள் பார்த்தார்களா?

'தரமணி' வெற்றியைப் பார்த்து நான் தேர்ந்தெடுத்த துறை சரிதான் என்று எனது பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். ஆனால், சினிமா என்றால் எந்தளவு சிரமம் என்பது என் மூலம் தெரிந்துகொண்டதால் என்னுடைய உழைப்பைப் பார்த்து அப்பா இவ்ளோ சிரமத்தோடு இந்த துறையில் இருக்க வேண்டுமா? என்று கேட்டார். சிரமமில்லாமல் முன்னேற்றம் ஏது? சிரமப்பட்டால் தான் முன்னேற முடியும். எனவே நான் அந்த பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்று அப்பாவிடம் கூறினேன் என தன் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details