விஜய் - அட்லி கூட்டணியில் நேற்று (அக்.25) வெளியாகியுள்ள திரைப்படம் 'பிகில்'. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
மேலும் இத்திரைப்படத்தில் கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு என பல்வேறு நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ரசிகர்கள் மத்தியில் ராயப்பன் கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதனையடுத்து நடிகையும் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளருமான வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், 24 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யின் முதல் தீபாவளி ரிலீஸ் என்னுடன் நடித்த சந்திரலேகாதான். நாங்கள் இருவரும் பின்நோக்கிப் போய் எங்களுடைய அழகான நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறோம். விஜய்யின் ஹீரோயின் நான் என்பதில் எனக்குப் பெருமை உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
ஷாஜகான், திருமலை, அழகிய தமிழ்மகன், கத்தி, மெர்சல், சர்கார் உள்ளிட்ட விஜய் படங்கள் தீபாவளிக்கு வெளியானவை என்பது கூடுதல் தகவல்.
இதையும் வாசிங்க: 'தலைவருக்கு அடுத்து தளபதி: விஜய் vs விஜய் சேதுபதி!'- ரத ரத ரத ரா!