அஜித் - ஹெச்.வினோத் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம் வலிமை. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய ஹெச். வினோத் உடன் அஜித் இணைந்திருக்கிறார்.
அஜித்தின் 60ஆவது படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
காவல் துறை அதிகாரியாக அஜித் நடிக்கும் இந்தப் படத்தையும் பே வியூ புராஜெக்ட்ஸ் நிறுவனம் சார்பில் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.
யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் தேர்வு ஒருபுறம் நடக்க, அஜித்துக்கு ஜோடியாக நடிக்க இலியானா, ரகுல் பிரீத் சிங், யாமி கௌதம் ஆகியோர் நடிக்க உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் இப்படத்தில் தற்போது நவதீப் இணைந்துள்ளதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இவர் தமிழில் 'அறிந்தும் அறியாமலும்', 'ஏகன்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர். சமீபத்தில் இப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு இணைந்துள்ளார்.
இப்படத்தில் மொத்தம் 3 வில்லன்கள் என கூறிவருகின்றனர். இதில் ஒருவர் இளம் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இணைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய 'RX 100' திரைப்பட நடிகர் ஆவார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் கார் ரேஸ், பைக் ரேஸ் போன்ற காட்சிகள் உள்ளன என்று படக்குழு வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்தது. இந்த நிலையில் 'வலிமை' படக்குழு கார் ரேஸ், பைக் ரேஸ் உள்ளிட்ட காட்சிகளை படமாக்குவதற்காக ஏப்ரல் மாதம் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்ல முடிவு செய்துள்ளனர். இதற்காக போனி கபூர் சுவிட்சர்லாந்து சென்று அதற்கான சிறப்பு அனுமதி வாங்கியிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இப்படத்தை இந்த வருட தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.