'நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஹெச். வினோத் இயக்கத்தில், அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர்.
அஜித்தின் 60ஆவது படமான வலிமைக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்ததையடுத்து 'வலிமை' பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ட்ரெய்லர் வெளியிட்ட படக்குழு
வலிமை திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் எனவும் தகவல்கள் பரவிவந்த நிலையில், படத் தயாரிப்பாளர் போனி கபூரும் அதனை ட்விட்டரில் உறுதிசெய்திருந்தார். இந்நிலையில் இன்று (டிசம்பர் 30) மாலை 6.30 மணியளவில் 'வலிமை' திரைப்படத்தின் ட்ரெய்லர் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து வலிமை ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகத் தொடங்கியுள்ளன. முன்னதாக இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. வலிமை படத்தின் அம்மா சென்டிமென்ட் பாடலும் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது.
மாஸ்டரை முறியடிக்குமா 'வலிமை'?
'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் 12 மில்லியன், 'நாங்க வேற மாரி' பாடல் 38 மில்லியன், இரண்டாவது சிங்கிள் அம்மா பாடல் 8 மில்லியன், வலிமை மேக்கிங் வீடியோ 7 மில்லியன் பார்வையாளர்கள் எனத் தற்போதுவரை சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் வலிமையின் 'விசில் தீம்' இசையும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
எப்போதும் சமூக வலைதளங்களில் விஜய் - அஜித் ரசிகர்களின் போட்டி அதிகமாகவே இருக்கும். இதற்கு முன் விஜய் நடித்த மாஸ்டர் ட்ரெய்லர் பல சாதனைகளைப் படைத்த நிலையில், வலிமையின் ட்ரெய்லர் அதனை முறியடிக்கும் என ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க:’வலிமை’ திரைப்பட அஜித் புகைப்படத் தொகுப்பு!