சில வருடங்களுக்கு முன்பு, என் நண்பர்களுடன் ஒரு நாள் மாலை நான்கு மணி அளவில், வடபழனியில் பேருந்துக்குள் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று நாங்கள் இருந்த பேருந்தின் அருகே சட்டென்று வந்து நின்றது கருப்பு நிற கார். உள்ளே வெள்ளை ஜிப்பாவில் மிடுக்காக ஒரு மனிதன் அமர்ந்திருந்தார். சட்டென்று குதூகலமாகிய நாங்கள் அவரை நோக்கிக் கையசைக்க ஒரு புன்சிரிப்பும், ஒரு சின்ன கையசைவும் எங்களுக்குப் பதிலாகக் கிடைத்தது.
அவ்வளவுதான், சிக்னல் விழுந்து வண்டிகள் செல்ல ஆரம்பித்துவிட்டன. வெறும் இரண்டு நிமிடங்கள்தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. சரியில்லாத ஒரு படத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பிய எங்களுக்கு அவரது புன்சிரிப்பும், மிடுக்கும் தந்த உற்சாகம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. படத்தில் நான்கு பஞ்ச் டயலாக் பேசி சண்டைக் காட்சிகளில் வில்லன்களைப் பறக்கவிடும் ஹீரோவுக்கு அந்த ஈர்ப்பும், காந்த சக்தியும் இருப்பது சாதாரணம். ஆனால் ஒரு கவிஞருக்கு, ஒரு பாடலாசிரியருக்கு அந்த ஆற்றல் இருக்கிறதென்றால், அது கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு மட்டுமே.
கவிஞரும் வறுமையும்
கவிஞரின் வாழ்க்கை ஆச்சரியங்கள் நிறைந்தது. கவிஞர் பிறந்தது இன்றைய வைகை ஆற்றுப்படுகையில் மூழ்கிப்போன 16 ஊர்களில் ஒன்றான மெட்டூர் என்ற கிராமம். அவரை வளர்த்ததோ இன்றைய தேனி மாவட்டத்திலுள்ள வடுகபட்டி கிராமத்தின் கடும் வறுமையே அவரை வளர்த்தது. பின்னாட்களில் தனது வடுகபட்டி வாழ்க்கையை நினைவு கூறும்போது, "வறுமையே எங்கள் ஆசான்" என்று குறிப்பிடுகிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம் வறுமையே ஒருவனுக்குச் செல்வத்தை, வாழ்க்கையை, நேரத்தை, மனிதர்களை, எதிர்காலத்தை, லட்சியங்களை கற்றுக் கொடுப்பதாகக் கூறுகிறார் இந்த ஆச்சரியக் கவிஞர்.
கவிஞரும் இசைஞானியும்
பத்மபூஷன், பத்ம ஸ்ரீ, கலைமாமணி விருது, ஏழு தேசிய விருதுகள், பல மாநில விருதுகள், சினிமா விருதுகள் என்று பெற்றிருக்கும் இவரது பேனா இன்றோ நேற்றோ எழுதத்தொடங்கியது இல்லை. 1980ஆம் ஆண்டு மார்ச் மாதம் அரசு அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலரின் மனைவிக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் மனைவியை அனுமதித்துவிட்டு வரும்பொழுது திடீரென்று அலைபேசியில் அழைப்பு. எடுத்தால் மறுபுறம், இளையராஜாவும் பாரதிராஜாவும் உங்களுக்காக மெட்டுடன் காத்திருக்கிறார்கள், விரைவாக அட்லாண்டா ஹோட்டலிலுள்ள 114ஆம் அறைக்குச் செல்லுங்கள் என்ற செய்தி.
அட்லாண்டா ஹோட்டலுக்கு செல்கிறார் அந்த அலுவலர். இசைஞானி இசைக்கிறார், அந்த அரசு அலுவலர் கூர்ந்து கவனிக்கிறார். பாரதிராஜா அப்போது, ”கவிஞர் வேற புதுசு நீ வேற மெட்டப்போட்டு மிரட்டியிருக்க, ரெண்டு நாள் டைம் கொடுப்போம்” என்று எழுகிறார். அப்பொழுது யாரும் எதிர்பாராத வகையில் அந்த அலுவலர், "இது ஒரு பொன்மாலைப் பொழுது வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்..." என்று பல்லவியை கூறுகிறார். அச்சமயத்தில் அந்த அலுவலருக்குக் குழந்தை மட்டும் பிறக்கவில்லை, இந்த தமிழ்ச் சமூகத்தில் பல சாதனைகளைப் படைக்கக் காத்திருந்த கவிஞரும் பிறந்தார். ஆம், அந்த குழந்தை தான் மதன் கார்க்கி,அந்த அலுவலர் வேறு யாராக இருக்க முடியும் வைரமுத்து தான்.
கவிஞரும் இசைப்புயலும்
இந்த மாபெரும் கூட்டணி பல வருடங்கள் வெற்றிகரமாக திகழ்ந்தது. எதிர்பாராத விதமாக 1986ஆம் ஆண்டு வெளியான 'புன்னகை மன்னன்' திரைப்படமே இந்த கூட்டணியைத் தமிழ் சமூகம் ரசிக்கக் கிடைத்த இறுதி வாய்ப்பாக அமைந்தது. பின்னாட்களில் இந்தப் பிளவு குறித்து, தனது 'ஆயிரம் பாடல்கள்' என்ற புத்தகத்தில் வைரமுத்து இப்படி கூறுகிறார், "இந்த (இளையராஜா - வைரமுத்து) கூட்டணி உடைந்ததற்கு அதிகப்படியான சுயமரியாதைதான் காரணம். அதிகப்படியான சுயமரியாதையும் மூடநம்பிக்கைதானே"
பின்னர் ஒரு ஐந்து வருடங்களாக எந்த ஒரு பெரிய படமுமின்றி இருந்தார் வைரமுத்து. 1992 பாலச்சந்தர் தயாரிப்பில் மணிரத்னம் இயக்க அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான திரைப்படம் 'ரோஜா'. சலனமின்றி இருந்த நீரில் விழுந்த பாறை எழுப்பும் சத்தத்தைப் போல ஆறு வருடங்களுக்குப் பிறகு அவர் எழுதிய பாடலும் சத்தத்தை எழுப்பியது. கைதட்டல் என்ற சப்தம் மட்டுமல்ல, தேசிய விருதும்தான்! அங்கு மீண்டும் தொடங்கிய அவரது அசுரப் பாய்ச்சல் 38 வருடங்களாக டாப் கியரில்தான் செல்கிறது.
கவிஞரும் காதலும்
"வயிற்றுக்கும் தொண்டைக்குமாய் உருவமில்லா உருண்டையொன்று உருளக் காண்பாய்... காதலித்துப் பார்" என்ற இவரது காதல் கவிதையை காதலிப்பவர்கள் யாரும் கேட்காமலிருந்திருக்க முடியாது. இதை கேட்பவர்கள் யாரும் காதலிக்காமல் இருக்க முடியாது. அதேபோல் 1999ஆம் ஆண்டு வெளியான "மின்சாரக் கனவு" திரைப்படத்தில் காதலின் மென்மையை, "பூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும்... பூ கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்.... அட, உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு" என்று எழுதியிருப்பார். இந்த உலகத்தில் ரசிப்பதற்கு எவ்வளவோ இருக்கின்றன. ஆனால் தன் மனதுக்கு நெருக்கமான துணை இருந்தால்தான் அந்த ரசிப்புத்தன்மை நமது கண்களை பிரசவிக்கும். எனவே, நமது கண்களுக்கு பிரசவம் பார்த்து இந்த உலகை எப்படி ரசிக்க வேண்டும் என சொல்லிக்கொடுத்தவர் வைரமுத்து.
கவிஞரும் தத்துவமும்
மாபெரும் மன்னன் ஆன அலெக்ஸாண்டர் தான் மரணிக்கும் தருவாயில், பல நாடுகளைக் கைப்பற்றினாலும் போகும்போது எதையும் எடுத்துச் செல்வதில்லை என்பதைக் காட்ட, சவப் பெட்டியில் கைகளை மட்டும் வெளியில் தெரியுமாறு எடுத்துச் செல்லுங்கள் என்று கூறியிருப்பார். அதன் சாரத்தை மிக அழகாகப் பாமரனுக்கும் புரியும் வகையில் 'முத்து' படத்தில், "மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை... மனிதன் மீது மண்ணுக்கு ஆசை... மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது, அதை மனம்தான் உணர மறுக்கிறது" என்று கூறி இந்த உலகத்தில் ஊற்றெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் பேராசை மீது போர் தொடுத்திருப்பார் பேரரசு.