ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின (ஜன.26) நிகழ்வின் போதும் பல்வேறு மாநிலங்களின் சார்பில் ஒவ்வொரு மையக்கருவின் அடிப்படையில் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். அந்த வகையில் இந்த ஆண்டு 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற இருப்பதால், இந்த ஆண்டுக்கான மையக்கருவாக சுதந்திர போராட்ட வீரர்கள் என்ற மையக்கரு தேர்வு செய்யப்பட்டது.
இந்நிலையில் கரோனா காரணமாக இந்த ஆண்டு 12 மாநிலங்களின் அணிவகுப்பு வாகனங்கள் மட்டுமே பங்கேற்க ஒன்றிய அரசு சார்பில் அனுமதி அளித்துள்ளது. இவற்றில் தமிழ்நாட்டின் சார்பிலான அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்படவில்லை.
கர்நாடகத்துக்கு மட்டும் அனுமதி
தமிழ்நாட்டில் இருந்து விடுதலை போராட்ட வீரர்களான வேலுநாசச்சியார், வ.உ.சிதம்பரனார், பாரதியார் ஆகியோரின் படங்கள் இடம்பெறும் வகையிலான அலங்கார ஊர்தி அமைக்கப்படும் என ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு சார்பில் முன்மொழிவு கொடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் தமிழ்நாடு சார்பிலான அந்த அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்படவில்லை. தமிழ்நாடு மட்டுமின்றி தென் இந்தியாவில் இருந்து வேறு எந்த மாநிலத்தின் அலங்கார ஊர்தியும் தேர்வு செய்யப்படவில்லை. பாஜக ஆளும் தென் மாநிலமான கர்நாடகாவில் இருந்து மட்டும் அலங்கார ஊர்தி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.