தமிழ்நாட்டின் நிலை கண்டு தலைகுனிகிறேன் - கவிஞர் வைரமுத்து! - வைரமுத்து
சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து, தமிழகத்தின் இரண்டாவது தேவை சாராயம் ஆகிவிட்டதை நினைத்து தலைகுனிவதாக தெரிவித்தார்.

சென்னையின் முக்கியமான இலக்கிய அடையாளங்களின் ஒன்றான, டிஸ்கவரி புக் பேலஸ் புத்தக நிலையம், 50 நாள் புத்தகக் காட்சியை ஒருங்கிணைத்துள்ளது. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்டுள்ள புத்தக விற்பனை மற்றும் அதுசார்ந்த சோர்விலிருந்து வாசகர்களை மீட்டெடுக்கும் விதமாகவும், 2021ஆம் ஆண்டை நம்பிக்கையுடன் துவங்குவதற்கான ஒரு வரவேற்பு விழாவாகவும் இந்த புத்தகக் காட்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர், பதிப்பாளர் வேடியப்பன் தெரிவித்துள்ளார்.
இந்த சிறப்புப் புத்தகக் காட்சியை கவிப்பேரரசு வைரமுத்து தொடங்கி வைத்துள்ளார். அப்போது பேசிய வைரமுத்து கூறுகையில் ஓர் இனத்தின் முதல் தேவை - உணவுத் தேவை, இரண்டாம் தேவை - அறிவுத் தேவை. ஆனால், தமிழ்நாட்டின் இரண்டாம் தேவை சாராயமாகிவிட்டதை எண்ணி தலைகுனிகிறேன் என்றார்.
இவ்விழாவிற்கு தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் துணைத்தலைவர்கள் எமரால்ட் பதிப்பகம் ஒளிவண்ணன் மற்றும் பாரதி புத்தகாலயம் நாகராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
பபாசியின் முன்னாள் செயலாளர்கள், சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பக உரிமையாளர் புகழேந்தி மற்றும் யுனிவர்செல் பப்ளிஷர் ஷாஜகான் ஆகியோர் கலந்துகொண்டனர்.