இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ் - ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு வடிவேலுவின் பிரபல டயலாக்கான 'பிளான் பண்ணி பண்ணனும்' என்பதை தலைப்பாக வைத்துள்ளனர்.
பாணா காத்தாடி, செம போத ஆகாத படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் - யுவன் ஷங்கர் ராஜா புதிய படத்தில் கூட்டணி அமைத்துள்ளனர்.
பயண கதையாக உருவாகவுள்ள இந்தப் படத்தில் கதாநாயகனாக டிவி பிரபலம் ரியோ ராஜ் நடிக்கிறார். இவர் சமீபத்தில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தில் ஹீரோவாக நடித்தார்.
இதைத் தொடந்து இப்படத்தின் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கவுள்ளார். முன்னதாக, கவின் நடிப்பில் வெளியான 'நட்புனா என்னனு தெரியுமா' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதையடுத்து தற்போது மீண்டும் டிவி பிரபலத்துடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
ரியோ ராஜ், ரம்யா நம்பீசனுடன் எம்.எஸ். பாஸ்கர், சந்தான பாரதி, பால சரவணன், ரேகா, லிவிங்ஸ்டன், விஜி சந்திரசேகர், ரோபோ சங்கர், முனீஸ்காந்த், ஆடுகளம் நரேன், ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ட்ரெய்லர், படம் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு அறிவிக்க உள்ளது.