மணிரத்னம் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் 'வானம் கொட்டட்டும்' படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி படம் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தில் சரத்குமார், ராதிகா சரத்குமார் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜோடியாக நடித்துள்ளனர். விக்ரம் பிரபு - ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் தங்கையாக நடித்துள்ளனர். மடோனா செபாஸ்டின், சாந்தனு, நந்தா, மதுசூதன ராவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.
இயக்குநர் மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் மூலமாக படத்தைத் தயாரிக்க, அவரது உதவியாளர் தனா இயக்கியுள்ளார். பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் இந்தப் படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.
படத்தின் ட்ரெய்லர் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து. படம் நாளை (பிப். 7 ஆம் தேதி) வெளியாகவிருக்கும் நிலையில், படத்தை பிரபலப்படுத்தும் விதமாக ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
கோபத்தில் கொலை செய்து ஜெயில் தண்டனை அனுபவிக்கும் சரத்குமார், அவரது மனைவி ராதிகா ஆகியோர் தங்களுக்கிடையே இன்லெண்ட் லெட்டர் மூலம் பரிமாற்றங்கள் நிகழ்த்துவதை மிகவும் உணர்வுப்பூர்வமான காட்சி அமைப்புடன் எடுத்துக் கூறியது இந்த வீடியோ. இதில், இருவருக்குமிடையேயான உறவின் பிணைப்பை வலுப்படுத்திய சித் ஸ்ரீராமின் பின்னணி இசையும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் என டிஜிட்டல் பயணத்தில் இருக்கும் தலைமுறையிடம், சென்ற நூற்றாண்டில் உறவுகளுக்குப் பாலமாக விளங்கிய இன்லெண்ட் லெட்டரின் வார்த்தை பரிமாற்றங்கள் குறித்து உணர்த்தும் விதமாக அமைந்திருந்த இந்தக் காட்சி படம் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து மற்றொரு ஸ்னீக் பீக் வீடியோவில், ஐஸ்வர்யா ராஜேஷ், வேலையில்லா பட்டதாரி புகழ் அமிதேஷ் இடம்பெறும் க்யூட் காட்சி ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
காதல், குடும்ப சென்டிமென்ட் கலந்த அம்சத்தில் வானம் கொட்டட்டும் படம் உருவாகியுள்ளது எனத் தெரிகிறது.