எம்ஜிஆர் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவரது தாக்கம் அரசியல், சினிமா களத்தில் இருக்கிறது. அதன் அடிப்படையில் எம்ஜிஆர் விவசாயியாக நடித்த உழைக்கும் கரங்கள் படத்தைப் போல விவசாயிகள் பிரச்னையை மையமாக வைத்து ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது.
’உழைக்கும் கைகள்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் எம்ஜிஆராக, நாமக்கல் எம்ஜிஆர் நடித்துள்ளார். எம்ஜிஆர் வேடமிட்டு பல்வேறு மேடைகளில் தோன்றியுள்ள இவருக்கு, ஜோடியாக கிரண்மயி நடித்துள்ளார்.
மேலும் ஜாக்குவார் தங்கம், பிரேம்நாத் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். விஜயகாந்த்தை வைத்து பூந்தோட்ட காவல்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய செந்தில்நாதன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
ரீல் எம்ஜிஆர் நடிக்கும் உழைக்கும் கைகள் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த நடிகர் நடிகையர், கவிஞர் பிறைசூடன், நடிகர் லொல்லு சபா ஜீவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம் வெளியாகும் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.