சென்னை: நடிகர் சிம்புவின் ஒவ்வொரு பட வெளியீட்டின் போதோ அல்லது படம் தொடங்கப்படும் போதோ, பிரச்னைகள் கிளம்புவது வாடிக்கையாகி விட்டது. தற்போது சிம்பு நடிப்பில் வெளிவர உள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்திற்கும் பிரச்னை வர, இதற்கான காரணம் என்ன என்பது குறித்து, சிம்புவின் தாயார் டி. உஷா ராஜேந்தர் காணொலி மூலம் பதில் அளித்துள்ளார்.
அதில், ”மைக்கேல் ராயப்பன் தயாரித்த ”அன்பானவன் அடங்காதவன் அசராதவன்” படத்தை சிலம்பரசன் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் இருந்து, நடித்து முடித்துக் கொடுத்துவிட்டார். அதே சமயம் பட ரிலீஸுக்கு முன்பு, சிம்புவோட சம்பள பாக்கி நிலுவைத் தொகை, மூன்றரை கோடி ரூபாயைத் தருவதாக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கூறியுள்ளார். ஆனால், பணம் தரப்படவில்லை.
சம்பளத்தை விட்டுக் கொடுத்த சிம்பு
இருப்பினும் சிலம்பரசன் டப்பிங் எல்லாம் பேசி முடித்துக் கொடுத்தார். கூடவே தனக்கு வரவேண்டிய சம்பளம் வராததால் நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார். ஆனால், பட வெளியீட்டன்று இரவு தயாரிப்பாளர், பாக்கி பணத்தை சிலம்பரசன் விட்டுக் கொடுத்தால் தான் படத்தை வெளியிட முடியும் என்று சொன்னார். இதுகுறித்து சிலம்பரசனிடம் என்ன செய்யலாம் என கேட்டோம்.
அப்போது சிம்பு பணத்தை விட்டுக் கொடுக்கலாம்னு சொல்லி, ட்ரிப்பிள் ஏ படத்தை வெளியீடு செய்ய உதவினார். இதற்கிடையில் அந்த தயாரிப்பாளர் சிம்புவுக்கு கொடுத்த சம்பளத்திற்கு ஜி.எஸ்.டி வரியும் கட்டவில்லை. டி.டி.எஸ்ஸும் பிடித்திருந்தார். பிடிக்கப்பட்ட டி.டி.எஸ்ஸையும், அவர் கட்ட வேண்டிய இடத்தில் கட்டவில்லை. இதை எல்லாம் விட முக்கியமாக, அவர் முதலில் சம்பளமாக கொடுத்த காசோலையில் மோசடியும் (CHECK BOUNCE) அரங்கேறியுள்ளது.
இப்படி எல்லா விதத்திலும் தயாரிப்பாளர் சிக்கல் கொடுத்தாலும், நாங்கள் பணத்தையும் விட்டுக் கொடுத்து, படத்தையும் வெளியிட வைத்த பிறகும், அவர் பிரச்னை செய்கின்றார். இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், தயாரிப்பாளார் மைக்கேல் ராயப்பன் நஷ்டப்பட்டிருக்கிறார், அதனால் சிலம்பரசன் சம்பளமே இல்லாமல் ஒரு படம் நடித்துக் கொடுக்க வேண்டும்.