பிரதமர் நரேந்திர மோடி திரைத்துறை பிரபலங்களுடன் நடத்திய 'Change within meet' நிகழ்ச்சியில் தென்னிந்திய திரைத்துறையினர் புறக்கணிப்பட்டதாக தெலுங்கு நடிகர் ராம் சரணின் மனைவி உபாஸனா வேதனைத் தெரிவித்ததைத் தொடர்ந்து, தற்போது மகளிர் காங்கிரஸ் தேசியச் செயலாளரும், பிரபல நடிகையுமான குஷ்பூ, தனது ட்விட்டர் பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளார்.
பிரபல இந்தி திரை பிரபலங்களான ஷாருக்கான், ஆமிர்கான், கங்கனா ரணாவத், ஏக்தா கபூர் உள்ளிட்டோர் பங்குபெற்ற நிகழ்ச்சி தொடர்பாக, ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகை குஷ்பூ, ”தென்னிந்திய சினிமாவும் நமது நாட்டைப் பிரதிபலிக்கும் விதமாக படங்கள் தயாரிக்கிறது. தென்னிந்தியாவிலிருந்து சிறந்தத் திறமையாளர்கள் வெளிவருகின்றனர். மிகப்பெரும் சூப்பர் ஸ்டார்களும், இந்தியாவின் சிறந்த நடிகர்கள் பலரும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களும் இங்கிருந்தே வருகின்றனர். இப்படியிருக்க ஏன் தென்னிந்தியர்கள் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை? இந்தி சினிமாக்கள் மட்டுமே இந்திய சினிமாக்களை பிரதிபலித்து வருமானம் ஈட்டித் தருவதில்லை” என ஆதங்கமும், வேதனையும் பொங்க கருத்து தெரிவித்துள்ளார்.